ஈரோடு: ஈரோடு மொடக்குறிச்சியில் ரூ.4.9 கோடியில் அமைக்கப்பட்ட பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தீரன் சின்னமலையின் படைத்தளபதியும் சுதந்திர போராட்ட வீரருமான மாவீரன் பொல்லானின் சிலை திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் பொல்லான் சிலை என்றார்.

இரண்டு நாள் பயணமாக கோவை ஈரோடு மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் ரூ.208.50 கோடி மதிப்பிலான செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பிறகு பூங்கா வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இதைத்தொடர்ந்து, சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான இன்று ஈரோட்டுக்கு முதல்வர் வருகை தந்தார். இன்று காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலிலன் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றார்.
மேலும், ங்கு, ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் உட்பட மாவட்டத்தில் முடிவுற்ற ரூ.235 கோடி மதிப்பிலான 970 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்ததில் பெருமையும் வீரமும் அடைகிறேன். சொன்னால் சொன்னதை செய்பவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றவர், சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் பொல்லான் சிலை என்றார்.
தொடர்ந்து பேசியவர், தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருந்தவர் மாவீரன் பொல்லான் என்று புகழாரம் சூட்டியவர், அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு சட்டம், மக்களுக்கு ஒளிவிளக்காக திகழ்கிறது.‘ அருந்ததியினரில் 3,944 மாணவர்கள் பொறியியலும், 193 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கிறார்கள். என்னுடைய சார்பில் அருந்ததியினர் மசோதாவை அறிமுகப்படுத்த கலைஞர் கேட்டுக் கொண்டார். ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பில் என்னுடைய பங்கு இருந்ததை எண்ணி பெருமையடைகிறேன். அருந்ததியினர் மக்களுக்கு தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்றவர், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூரில் அருந்ததியின மாணவர்களுக்கு 26 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியை பெறுவது தான் வரலாறு என பாராட்டு கிடைத்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் உண்மையான வளர்ச்சி. எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.