சென்னை: தேர்தல் கூட்டணி  மற்றும் தொகுதிகள் பங்கீடு குறித்து பாஜக தேசிய தலைமையுடன் விவாதிக்க  மாநில பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார்.

தமிழ்நாட்டில் 2026 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தங்களது பிரசார வியூகங்களை வகுத்து மக்களை சந்தித்து வருகின்றனர். இந்த முறை மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியே அப்படியே தொடரும் நிலையில், நடிகர் விஜயின் தவெக கட்சி தனிக்கூட்டணி ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த  நிலையில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். அங்கு   உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பைஜயிந்த் பாண்டா ஆகியோரை சந்திக்க உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, கூட்டணி நிலவரம், தேர்தல் பணிகள், வியூகங்கள் , தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், தேனி மாவட்டம்  போடிநாயக்கனூரில் சாலையில் கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்த நயினார் நாகேந்திரேன் பின்னர்,   நாட்டு இன மாடு வளர்க்கும் விவசாயிகளை சந்தித்து, வனப் பகுதிகளில் நாட்டு மாடு மேய்ச்சலுக்கு இருக்கும் தடைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து அவர்களிடம் கேட்டறிந்து கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது  ” போடிநாயக்கனூர் நாட்டு இன மாடுகளை விவசாயிகள் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல இருக்கும் தடைகளை நீக்கி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.

அப்போது செய்தியாளர்கள்,  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறியவர்,  அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என தெரிவித்தார்.

மேலும், வனப்பகுதிகளில் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய நாங்கள் தமிழக அரசை வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.