சென்னை: அதிமுக ஒன்றிணைய ஒரு மாதம் கெடு.. இல்லாவிட்டால்…? – செங்கோட்டையனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம்  ஓலமிட்டுள்ளார். நாமெல்லாம் கண்ணீர்விட்டு அழுகிற சூழ்நிலையை உருவாக்கியவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என  தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கூறினாபர்.

‘அதிமுக ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் ஒரு மாதம் கெடு விதித்துள்ளார். இல்லாவிட்டால் டிசம்பர் 15 அன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஓபிஎஸ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது நிர்வாகிகளின் எண்ணங்களை தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக ஓ.பன்னீர்செல்வம் கேட்டு பெற்றார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசும்போது, ”ஒரு மாதத்தில் அதிமுக ஒன்றிணையவில்லை என்றால் ஒரு வியூகத்தை அமைத்து கழகமாக மாற்றி செயல்படுவோம். தேர்தலில் வெற்றி பெறுவோம். ஒன்றிணைய இடையூறாக உள்ள தீய சக்தியை விரட்டியடிப்பது தான் ஒரே நோக்கம். ஒற்றுமையாக இருக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் வெற்றி நோக்கி செல்வோம்” என்று பேசினார். அதன் பிறகு இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதலாவதாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பு இந்த தருணத்திலிருந்து ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்’ என்று செயல்பட தொடங்குகிறது. இரண்டாவதாக 2026 தேர்தலை மனதில் கொண்டு இந்த உரிமை மீட்புக் கழகம் சார்பாக வருகின்ற தேர்தலில் கூட்டணி சம்பந்தமாக எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளும், அனைத்து உரிமையும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து உரையாற்றிய ஓபிஎஸ்,  இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவாக மூன்று ஆண்டு காலம் நடைபெற்று இன்றைக்கு நாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகமாக அமைப்பு உருவாகியுள்ளது. மூன்று ஆண்டுகளாக நீங்கள் தந்திருக்க கூடிய ஆதரவுக்கு தான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற இயக்கத்தை இன்று சில சுயநலவாதிகள், சர்வாதிகார போக்கோடு வழிநடத்த துணிந்து அதனால் ஏற்பட்ட விளைவு இன்றைக்கு நம்முடைய இயக்கம் 11 தேர்தல் களில் தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ சொன்னோம். அவர்கள் கேட்கவில்லை. தவறான அணுகுமுறை, தவறான பொதுக்குழு, தவறான செயற்குழு. இப்படி, பல நிலைகளில் தான்தோன்றித்தனமாக இயக்கத்தை வழிநடத்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் அபிப்பிராயத்தையும், நம்பிக்கையையும், ஆதரவையும் இன்று அதிமுக இழந்து விட்டது. அதனால் தான் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவானது இன்று கழகமாக மாறி இருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் என்கிற பதவி நாம் அனைவரும் ஒன்று கூடி, ஜெயலலிதா அதிமுகவுக்கு செய்த தியாகத்தை எண்ணி, ஜெயலலிதா மட்டுமே இனிமேல் நிரந்தர பொதுச் செயலாளர் என்கின்ற பட்டத்தை கொடுத்தோம். அதற்கு மாற்றாக, கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. பிறகு தான்தோன்றித்தனமாக நிர்வாகத்தை கையில் எடுத்து இன்று நாமெல்லாம் கண்ணீர் விட்டு அழுகிற சூழ்நிலையை உருவாக்கியவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் ஒருமித்த கருத்தோடு பேசினார்கள்.

வரும் டிசம்பர் 15 ஆம் தேதி மீண்டும் தலைமை கழக, மாவட்ட செயலாளர்கள் கூட்டப்பட்டு கழகம் இனிமேல் எப்படி செயல்பட வேண்டும்? என தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவாக, பொதுமக்கள் ஏற்கக்கூடிய முடிவாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். அதிமுக ஒன்றிணைய 1 மாதம் கெடு. இல்லை என்றால் நாங்கள் முக்கிய முடிவு எடுக்க நேரிடும். எங்களை அந்த நிலைக்கு தள்ளிவிடாதீர்கள். உங்களை எச்சரிக்கையாக சொல்லி, கட்சி ஒன்றிய அனைவரும் செயல்பட வேண்டும். அனைவருக்கும் எனது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். உறுதியாக டிசம்பர் 15 ஆம் தேதி நாம் எடுக்கப் போகின்ற முடிவு அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமையும். திருந்தவில்லை என்றால் டிசம்பர் 15 ஆம் தேதி திருத்தப்படுவீர்கள்” .

இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் – எடப்பாடிக்கு10 நாட்கள் கெடு! செங்கோட்டையன்