சென்னை: நாங்கள்  தற்குறிகள் அல்ல ஆச்சரிய குறிகள்  என திமுகவுக்கு பதிலடியாக கடுமையாக விமர்சனம் செய்த தவெக தலைவர்  விஜய்க்க திமுக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். அப்போது,   “எந்த `குறி’-யாக இருந்தாலும் எங்களுக்கு  கவலையில்லை என தெரிவித்தார்.

முன்னதாக,    காஞ்சிபுரம் அருகே நேற்று காலை நடந்த தவெகவின்  மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார்.  காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற  தமிழக வெற்றி கழகத்தின் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி க்கு  காலை 10.50 மணியளவில் விஜய் வருகை தந்ததார் அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்ததுடன், அவர்கள் தவெகவினரை தற்குறிகள் என விமர்சித்து வருவதற்கும் பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:

இந்த நிகழ்ச்சியில் மக்களை சந்தித்த விஜய், காஞ்சி மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசி தன் உரையைத் தொடங்கினார். நாட்டிற்காக உழைப்பதற்காகவே அண்ணாதுரை பிறந்தார். பொதுநலத்தில் தான் நாள் முழுவதும் கண்ணாக இருந்தார் என்று எம்ஜிஆர் பாட்டு ஒன்று பாடி இருக்கிறார். அதனை கேட்டு இருப்பீங்க, அப்படிப்பட்ட காஞ்சி தலைவர் அண்ணாதுரை பிறந்த மாவட்டம் தான் காஞ்சிபுரம் மாவட்டம்.

தன்னுடைய வழிகாட்டி என்பதால், தான் ஆரம்பித்த கட்சியின் கொடியில் அண்ணாதுரை படத்தை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அண்ணாதுரை ஆரம்பித்த கட்சி அதன் பிறகு கைப்பற்றியவர்கள் என்ன எல்லாம் பண்ணுகிறார்கள். நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியுமா என்ன மக்களே? உங்களுக்கு தான் அது நல்லா தெரியுமே?

தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், அவங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாதுங்க, எந்த வாயக்கால் வரப்பு தகராறு எல்லாம் ஏதுமே கிடையாதுங்க, அப்படி இருந்தாலும் அதனை நாம் கண்டுகொள்ள போவது கிடையாது.

அவர்கள் வேண்டுமானால் எங்கள் மீது வன்மத்தோடு இருக்கலாம். நாங்கள் அப்படி இல்லை. ஆனால் உங்களை, என்னை, நம்ம எல்லோரையும் பொய் சொல்லி நம்ப வைத்து, ஓட்டு போட வஞ்சு ஏமாத்தினாங்க இல்ல, அப்படி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து, மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிக்கிறாங்க, நாடகம் ஆடுகிறார்கள், அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?

அதனால் அவர்களை கேள்வி கேட்காமல் நாம் விட போவது இல்லை. இதனை காஞ்சிபுரம் மண்ணில் இருந்து சொல்கிறேன் என்றால், இந்த மண்ணுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.

“வாலாஜாபத் அருகே உள்ள அவலூர் ஏரி பாலாறை விட உயரமாக இருப்பதால் ஆற்றுத் தண்ணீர் ஏரிக்குப் போக முடியவில்லை. தடுப்பணை கட்டுவதன் மூலம் விவசாயம் சிறப்பாக நடக்கும். இதற்காக எத்தனை ஆண்டு மக்கள் போராட வேண்டும்?” என்று விஜய் கேள்வியெழுப்பினார்.

மேலும், “பரந்தூர் விமான நிலையப் பிரச்னையில் நாங்கள் விவசாயிகளின் பக்கம் மட்டுமே நிற்போம்” என்று கூறிய அவர், புகழ்பெற்ற காஞ்சிப் பட்டு நெய்பவர்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

60 ஆண்டுகளாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதையும் விமர்சித்த அவர், அரசால் அதற்கு ஒரு இடத்தை ஒதுக்க முடியாதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மக்களுக்காக சட்டபூர்வமாக எல்லா நல்லவற்றையும் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த மக்களுக்காக செய்ய வேண்டும். அந்த ஒரே லட்சியத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளோம். கொள்கை என்ன கிலோ என்ன, விலை என்ன கேட்கிற அளவுக்கு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சமத்துவம் சம வாய்ப்பு என்று கூறும் எங்களுக்கு கொள்கை இல்லை என்கிறார் முதல்வர்.

வக்பு சட்டத்தை எதிர்த்து முதலில் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்ற எங்களுக்கு கொள்கை இல்லையா? இவர்கள் கொள்கையே கொள்ளை தான்.

பவள விழா பாப்பா, நீ பாசாங்கு காட்டாதே பாப்பா, நீ நல்லவர்கள் போல் நடிப்பதை பார்த்து நாடே பாப்பா என்று சொல்லும். நாங்கள் இன்னும் விமர்சனங்கள் செய்ய ஆரம்பிக்கவே இல்லையே, இன்னும் நாங்கள் அடிக்க ஆரம்பிக்கவே இல்லையே, அதற்குள் அலறினால் எப்படி? அதனால் உங்களது அரசவை புலவர்கள் யாராவது இருந்தார்கள் என்றால், அவர்களின் கண்ணீரை துடைத்து விடுங்கள்.

மக்களின் பிரச்னை குறித்து பேச தான் இங்கு வந்து இருக்கிறோம். இந்த மக்களின் ரத்தத்துடன் பாலாறு சேர்ந்து ஓடுகிறது, இந்த ஆற்றினை அழித்து விட்டார்கள். மணலை கொள்ளை அடித்து இருக்கிறார்கள், இதில் ரூ.4730 கோடி மதிப்புள்ள மணல் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். இதற்கான ஆதாரம் கோர்ட், அமலாக்கத்துறையிடம் இருக்கிறது.

ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்கணும், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மோட்டார் சைக்கிள் உறுதியாக இருக்கணும், காரும் தான் லட்சியம். அதற்குண்டான பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தனும். வீட்டில் இருக்கிற ஒருவரும் டிகிரி படிச்சிருக்கணும், நிரந்தர வருமானம் கிடைக்கணும் அதுக்கு உண்டான வேலைவாய்ப்பினை உருவாக்கணும்,

கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்யணும், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் பயமின்றி நம்பி போகும்படி மாத்தணும். இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட்ல கவனம் செலுத்தணும். இதை எப்படி செயல்படுத்த போறோம் என்று தேர்தல் அறிக்கையில் விளக்கமாக தெரியப்படுத்துவோம்.

‘தற்குறிகள் அல்ல ஆச்சர்யக்குறிகள்’

தங்கள் கட்சி மீதான விமர்சனம் குறித்து பேசிய விஜய், “எம்ஜிஆர் கட்சியை ஆரம்பத்தில் இருந்தே கூத்தாடியின் கட்சி என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்கள் அனைவரும், மக்கள் போல் எம்ஜிஆர் அவர்களோடுதானே போய்ச் சேர்ந்தார்கள். இது வரலாறு. இது நம்மைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல், தவெக ஆதராவளர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பது குறித்தும் பதிலளித்தார். “தற்குறி தற்குறி என்கிறீர்களே, இவர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்கப் போகிறார்கள். இவர்களெல்லாம் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறி. தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி” என்றும் அவர் கூறினார்.

திமுக பதிலடி:

தவெக தலைவர் விஜய், நாங்கள் ஆச்சரிய குறிகள் என கூறியதுடன், திமுக மீது பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.  அதுகுறித்து பதிலளித்த திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், “திமுகவை குறை சொல்வதற்கு விஜய்க்கு தகுதி இல்லை” என்றார். விஜயின் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

அதுபோல விஜயின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  எந்த ‘குறி’யாக இருந்தாலும் கவலையில்லை” என்றவர், யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை, எங்களுக்கு யாரை கண்டும் பயமில்லை என்றவர், யாருடனும் தனிப்பட்ட  வெறுப்பு கிடையாது என்றும் கடுமையாக சாடினார். மேலும், தமிழ்நாட்டில் யாராலும், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றவர், அவர் “ஆச்சர்யக்குறியோ தற்குறியோ..  எங்களுக்கு தேர்தல் மட்டுமே குறி!” என்றார்.