சென்னை: வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், மாநகராட்சி மேயர், துணைமேயர் மற்றும் அதிகாரிகள்  மரியாதை  செய்தனர். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.

செக்கிழுத்த செம்மல்  வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலோட்டிய தமிழரின் 150-வது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. வ.உ.சி. எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின்  89-வது நினைவு நாளான தியாகத் திருநாளையொட்டி, அன்னாரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு அமைச்சர்  தாமோ அன்பரசன்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
திராவிட மாடல் அரசும் வ.உ.சிதம்பரனாரும்…
 கப்பலோட்டிய தமிழரின் 150-ஆவது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது!
 வ.உ.சி. பெயரில் 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிப்பு!
 கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி. அவர்களின் சிலை திறப்பு & அவர் சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டது!  
கோவை வ.உ.சி. பூங்காவில் திருவுருவச் சிலை திறப்பு!  
வ.உ.சி. அவர்களின் 150-ஆவது ஆண்டில் நெல்லை, தூத்துக்குடியில் உருவாகும் அனைத்துக் கட்டடங்களுக்கும் அவரது பெயர் சூட்டல்!  
வ.உ.சி. அவர்களின் 85-ஆவது நினைவு நாள் ‘தியாகத் திருநாள்’!  தூத்துக்குடி மேற்கு பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை எனப் பெயர் மாற்றம்!  
வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சி!
 வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை, வ.உ.சி. 150 சிறப்பு மலர் & மடிப்பேடு வெளியீடு!
 வ.உ.சி. அவர்கள் எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கம்!
 1908 திருநெல்வேலி எழுச்சி-க்கு நினைவுச் சின்னம் அறிவிப்பு! – எனத் தம் உயிரையும் உணர்வையும் தமிழுக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் அளித்த தியாகத் திருவுருவான #வஉசி அவர்களின் பெருமையை அனைத்து வகையிலும் போற்றி வரும் நமது  அரசின் சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கிப் போற்றுகிறேன்!
வாழ்க வ.உ.சி.!
இவ்வாறுகூறியுள்ளார்.
மாநில பாஜக தரப்பில், தலைவர  நயினார் நாகேந்திரன் நெல்லையில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மரியாதை செய்தனர். தியாகத்தின் திருஉருவமாய், வீரத்தின் மறு உருவமாய் நிமிர்ந்து நின்ற சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் ஐயா. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை நினைவு கூர்ந்து, திருநெல்வேலியில் அமைந்திருக்கும் ‘கப்பலோட்டிய தமிழரின் ‘ திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்தும், விதை தூவி வேரூன்றி விடலாம் என வந்த விதேசிகளை, தனி மனிதனாய் எதிர்த்து நின்று தலை சுற்ற வைத்த சுதேசியை வணங்கி மரியாதை செலுத்தியும், ஐயா வ.உ.சியின் 89 ம் குருபூஜையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வை துவக்கி வைத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது,  பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உடனிருந்தனர்.