சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அரப்பிக்கடலை நோக்கி நகர்வதால், தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். மேலும் அடுத்த 5 நாளில் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நேற்று முதலே மழை பெய்து வரும் நிலையில், நள்ளிரவு முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதுபோல, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மவாட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலை நோக்கி நகரும் என்பதால், தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, புறநகர்ப் பகுதிகளில் சென்னையில் சூரியஒளி தென்பட்டாலும், வரும் நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. சென்னைக்கு வடக்கேயும் தெற்கேயும் மழை பெய்து வருகிறது. மழை மேகங்கள் சென்னையை சுற்றுவளைத்து விட்டன.
இன்று(நவ. 18) 20 மி.மீ. முதல் 40 மி.மீ வரை மழைக்கு வாய்ப்புள்ளது. ஒரே இரவில் சென்னையில் மிதமான மழை பெய்தது. இன்றிரவு முதல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென் தமிழகத்தை நோக்கி நகருகிறது.
நேற்றிரவு டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறையில் நல்ல மழை பெய்தது.
t அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மாஞ்சோலை வனப்பகுதி கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
புதிய புயல்
குமரிக் கடல் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடல் நோக்கி நகர்ந்தவுடன், 5 நாள்களுக்குப் பிறகு, தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.