சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (நவம்பர் 16) அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஐஎன்டியுசி தேர்தல் முடிவு இரவு அறிவிக்கப்பட்டது. அதன்படி தலைவராக மு.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொருளாளராக வாழப்பாடி இராம.கர்ணன் (மறைந்த மக்கள் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தியின் மகன்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி.யின் தலைவர் உள்பட அனைத்து நிர்வாகிகளின் தேர்தல் சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பின்படி, நேற்று திருப்போரூரில் நடந்தது.
இந்த தேர்தலானது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி, ஓய்வு பெற்ற வருவாய்துறை அலுவலர் சேமா சுந்தரம் ஆகியோர் மேற்பார்வை யிலும், ஐஎன்டியுசியின் மூத்த உறுப்பினர்கள் ஏ.கல்யாண்ராமன், எஸ்.லிங்க மூர்த்தி எம்.ஆறுமுகம், எம். நந்தகுமார் ஆகியோர் தேர்தல் அதிகாரிகள் இருந்து தேர்தலை நடத்தினர்.
இதில் வாக்களிக்க தகுதியான 1810 உறுப்பினர்களில் 1740 பேர் கலந்துகொண்டு வாக்களித்தனர். தேர்தல் முடிந்த பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இரவு அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களை விஷ்ணுபிரசாத் எம்பி, சேமசுந்தரம் ஆகியோர் அறிவித்தனர்.

அதன்படி, ஐஎன்டியுசி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மு.பன்னீர்செல்வம் 1394 வாக்குகளும், செகரட்ரி ஜெனரல் பதவிக்கு கோவை செல்வம் 1135 வாக்குகளும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட வாழப்பாடி இராம கர்ணன் 958-வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்,
அத்துடன், பொதுச் செயலாளர்களாக வெங்கடேஷ், லலிதா சுந்தரமகாலிங்கம், கருப்பையா, வழக்கறிஞர் சரவணன், ராஜேஸ்வரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மூத்த துணை தலைவர்களாக ந.க.நாராயணசாமி, கே.எஸ். ஜி, குமார், விருகை என்.கண்ணன் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.
செயலாளர்களாக சங்கர், சங்கர் சம்மந்தம், ரவிகுமார், ஜோசப் ஜெரால்டு, தவுலத் கான் ஆகியோரும்,
துணைத் தலைவர்களாக பாலசுப்பிரமணியம், ஜெயபால், முருகேசன், ராஜசேகர், அரியலூர் தமிழ்மணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.