சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு 50 படிவங்கள் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என கூறி உள்ளது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் (SIR) பணிகளின் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்கள் (Booth Agents) நாளொன்றுக்கு 50 கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெற்று, வாக்குச்சாவடி அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம் எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் , தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (SIR) தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி அலுவலர்கள் கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகித்து, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர். இப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் வரை, அங்கீகரிக்கப்பட்ட பூத் ஏஜெண்டுகள் படிவங்களைப் பெற்று வழங்க இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் ஏஜன்டுகள், நாள்தோறும் 50 நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களைப் பெற்று, வாக்குச்சாவடி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம். படிவங்களை சமர்ப்பிக்கும்போது, பூத் ஏஜெண்டுகள் கட்டாயம் ஒரு உறுதிமொழியையும் அளிக்க வேண்டும். அந்த உறுதிமொழியில், என்னால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும், என் வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன். தவறான தகவல்கள் அளிப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தண்டனைக்குரியது என்பதை அறிவேன் எனக் குறிப்பிட வேண்டும்.
கட்சிகளின் ஏஜெண்டுகளிடம் பெறப்படும் கணக்கீட்டுப் படிவங்களை, வாக்குச்சாவடி அலுவலர்கள் சரிபார்ப்பார்கள். சரிபார்க்கப்பட்ட படிவங்களை, அலுவலர்கள் ‘டிஜிட்டல்’ வடிவமாக மாற்றி, வாக்காளர் பதிவு அலுவலருக்குச் சமர்ப்பிப்பார்கள். வாக்காளர் பதிவு அலுவலர், அந்தப் படிவங்கள் மீது ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அதிகாரி (ERO) அவ்வப்போது ஆய்வு செய்து, தேவைக்கேற்ப ஒவ்வொரு வழக்கையும் (case-to-case basis) ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெருமங்கலம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள 17 ஆயிரத்து 743 வாக்காளர்களுக்கு வாக்காளர் விவரப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மொத்தம் 22ஆயிரத்து 658 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
பல வாக்காளர்களின் பெயர்கள் ‘சிஸ்டத்தில்’ கண்டறியப்படாததால் நீக்கப்பட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் சமூக ஊடகப் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.
“வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு (BLOs) உதவுவதற்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், எஞ்சிய வாக்காளர்களுக்கும் படிவங்கள் விநியோகிக்கும் பணி விரைவில் நிறைவு செய்யப்படும்” என்றும் அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.