சென்னை: நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மேலும் 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை அனைத்தும் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதில் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த  3 சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி  நேற்று  ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் மொத்தம் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை அனைத்தும் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 16 சட்ட மசோதாக்களில் தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புரிமை மசோதா, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா, சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்ட ஒன்பது சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த மாத இறுதியில் ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சியில் பல்வேறு திட்டங்களை மேம்படுத்த, அதன் திறனை வலுப்படுத்த வழி வகை செய்யும் தமிழ்நாடு ஊராட்சிகள் ஐந்தாம் திருத்தச் சட்ட மசோதா,

தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட மசோதாவிற்கும் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.