சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு, சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு, அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்தனர்.
இந்த விவரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதால், ரவுடி கருக்கா வினோத்துக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று இந்த வழக்கு, என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, ரவுடி கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் எடுத்த என்.ஐ.ஏ போலீசார் காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தனர்.
இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நவம்பர் 12ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கருக்கா வினோத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, தீர்ப்புக்காக சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தை, தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், கருக்கா வினோத்தை மீண்டும் புழல் சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.