டெல்லி: டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் 10 பலியான நிலையில், இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொடூர சம்பவத்துக்கு குடியரசு தலைவர் , பிரதமர், முதல்வர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூறி உள்ளனர்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் நேற்று (நவம்பர் 10) மாலை 6.50 மணியளவில் குண்டு வெடிப்பு நடந்தது. இதன் காரணமாக அருகே சில வாகனங்களும் தீபிடிதது எரிந்தன .இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுஉள்ளது.
இதற்கிடையில் கார் வெடிப்பு சம்பவ இடத்தில் குண்டுவெடிப்புக்கான குழிகளோ அடையாளங்களோ இல்லையென்று கூறப்பட்டாலும், சிறிய கார் வெடித்து இந்தளவுக்கான பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர் விசாரணையில், . குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரையும், காரின் முந்தைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
குண்டு வெடிப்பு நடந்த கார், அரியானவை சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். காரின் முன்னாள் உரிமையாளர் முகமது சல்மானையும் குருகிராம் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக சம்பவம் நேற்று முன்தினம் அரியானாவில் காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. எனவே இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், இன்று மாலை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து கேட்டறித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது மனம்கனிந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு பல அப்பாவி உயிர்களைப் பலிகொண்டதால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அந்த இடத்திலிருந்து வரும் காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு எனது மனம்கனிந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. அவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
அதே நேரத்தில், பரிதாபாத்தில் நமது பாதுகாப்புப் படையினரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். கிட்டத்தட்ட 300 கிலோ வெடிபொருட்கள் மற்றும் பல AK-47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பது, நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசும் காவல்துறையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நான் கேட்டுக்கொள்கிறேன். அதிக கண்காணிப்பு தேவைப்படும் கடலோரப் பகுதிகளிலும் சிறப்பு கவனம் மற்றும் அதிகரித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று வலியறுத்தி உள்ளார்.