சென்னை: எழும்பூர் ரயில் நிலைய பணிகள் முடிவடையாத நிலையில், ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த சில தென்மாவட்ட ரயில்கள், தொடர்ந்து, இன்று (நவ.10) முதல் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்கள் எழும்பூரில் இருந்தே புறப்பட்டு செல்லும் நிலையில், ரயில்வே நிலைய பணிகள் தொடர்பாக பல ரயில் சேவைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக, சில முக்கிய ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து தென்மாவட்ட ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்து இருந்தது. இப்போது அந்த நாட்கள் முடிந்த நிலையில், வழக்கம்போல் எழும்பூரில் இருந்து ரயில்கள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலைய பணிகள் முடிவடையததால், சில முக்கிய ரயில்கள் தாம்பரத்தில் இருந்தே இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதன்படி, நவபம்ர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை,
எழும்பூர் – தஞ்சாவூர் இடையே இயக்கப்படும் உழவன் எக்ஸ்பிரஸ்,
கொல்லம் – எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்,
ராமேஸ்வரம் – எழும்பூர் இடையே இயக்கப்படும் சேது அதிவேக விரைவு ரயில்,
ராமேஸ்வரம் – எழும்பூர் விரைவு ரயில்
ஆகியவை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் புறப்பட்டு, அங்கேயே நிறுத்தப்படும்.
சென்னை எழும்பூர் – மும்பை அதிவிரைவு ரயில் தற்காலிகமாக சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, நவம்பர் 11 முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை, காலை 6.35 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, கடற்கரை நிலையத்திலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும்
மேலும், அகமதாபாத்-திருச்சிராப்பள்ளி வாராந்திர விரைவு சிறப்பு ரயில் நவம்பர் 13,20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (வியாழன்) காலை 9.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு ரேணிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், விழுப்புரம், சென்னை, பேரூர், பேரூர், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.