திருச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் திருமண நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சியில் கொண்டுள்ள  நிலையில், காவலர் குடியிருப்பில்  தஞ்சம் புகுந்த இளைஞரை   ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்ற வந்த  சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  அதுவும் காவலர் வீட்டிற்குள் புகுந்து ஒளிந்திருந்தவரை,  வீட்டுக்குள் புகுந்த கொலைவெறி கும்பல், பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சியில் வந்துள்ள நிலையில், திருச்சி மாநகரில் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.   இளைஞர் ஒருவர் உயிர் தப்பிக்க அருகே உள்ள புதிய காவலர் குடியிருப்பில் உள்ளே நுழைந்த நிலையில், அங்குள்ள காவலர் குடும்பத்தின் முன்பே, அந்  நபரை ஐந்து பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தி  கொன்றனர். இதையடுத்து, அவர்களை பிடிக்க முயற்சித்தபோது,  ஒருவர் மட்டும் சிக்கிய நிலையில், அவரை  பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட  நபரான  தாமரைச்செல்வன் (வயது 27) கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் பழைய தபால் நிலைய சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாமரை செல்வன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர். பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது நான்கு பேரும் பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உயிர் பயத்தில் அப்பகுதியில் அலறியடி ஓடியுள்ளார்.

காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த தாமரை செல்வன் தில்லை நகரில் பணிபுரியும் காவலர் செல்வராஜ் வீடு திறந்து இருந்ததால் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிரைண்டர் பக்கத்தில் போய் ஒளிந்து கொண்டுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் வீட்டுக்குள் நுழைந்து எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் காவலர் குடும்பத்தின் கண்முன்னே தாமரை செல்வனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட காவலர் குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டுள்ளனர்.

இதற்கிடையில், போலீசார், படுகொலை செய்யப்பட்டவர் தாமரைச்செல்வன் (27) என்பதும்,ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளதுடன், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ள நிலையில், திருச்சி மாநகரில் காவலர் குடியிருப்புக்கு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள், காவல்துறையினரின் செயல்பாடு குறித்து  கேள்வி எழுப்பி வருகிறது.