திருச்சி: இரண்டு நாள் பயணமாக திருச்சி சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று காலை , திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வருகை தந்துள்ளார். அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்பட அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்றனர்.

திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தி.மு.கவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சியில் புதிதாக ரூ.767 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் துவக்கி வைப்பதற்காகவும், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் முதல்வரை, மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த தொண்டர்களை சிறிது தூரம் நடந்து சென்று முதல்வர் சந்தித்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சுற்றுலா மாளிகை சென்றடைந்தார்.

சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர், நாளை காலை நடைபெறும் நிகழ்வுகள் பின்வருமாறு, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி இல்ல திருமண விழா சோமரசம்பேட்டை கலைஞர் திடலில் நடைபெறுகிறது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். திருமண நிகழ்வில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை செல்லும் முதல்வர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மீண்டும் திருச்சி திரும்பும் முதல்வர், திருச்சி பொன்மலைப்பட்டி அருகே முதியவர்களுக்கான ‘அன்புச்சோலை’ என்கிற திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.