சென்னை: மத்திய அரசின் உயரிய விருதை வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் பெற்றுள்ளது. அதுபோல சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. இதற்கு  முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.


சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பிற்கான தேசிய விருதை எம்டிசி (சென்னை மாநகர போக்குவரத்து கழகம்) வென்றது.

நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற பிரிவில் மத்திய அரசு சார்பில் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று அரியானாவில் குருகிராம் பகுதியில் நடைபெற்றது.  மத்திய அரசியின் இந்த உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது.

இந்த விருதினை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.

இதேபோல், சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரெயில், சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ ரெயில் பிரிவுகளில் மத்திய அரசின் இரண்டு விருதுகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பெற்றுள்ளது.

 தேசிய விருது வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்திற்கும், அமைச்சர் சிவசங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கும் பாராட்டுகள்! #LastMileConnectivity, நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.