சென்னை: கருர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்து வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

சமூக வலைதளத்தில் வன்முறையை தூண்டும் கருத்து பதிவிட்டதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி த.வெ.க. தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர்  பிரசாரத்தின்போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக,   41 பேர் பலியான நிலையில் தவெக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது. இதுகுறித்து, தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தனது எக்ஸ் தளத்தில், இலங்கை, நேபாளம் போல், அரசின் அடுக்குமுறைக்கு எதிராக genz புரட்சி ஏற்படும் என பதிவிட்டிருந்தார். பின்னர் அடுத்த சில மணி நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘

இதுதொடர்பாக, சைபர் குற்றப் பிரிவு போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர். தனக்கு எதிராக பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நேபாளத்திலும், இலங்கையிலும் ஆட்சியை கவிழ்த்த புரட்சியைக் குறிப்பிட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா கருத்து பதிவிட்டுள்ளார். கருத்துக்களை யார், எந்த சூழலில் பதிவிட்டனர் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். கரூரில் பெரிய சோக நிகழ்வு நிகழ்ந்த நிலையில், அதற்கு பொறுப்பேற்காத நிலையில், இதுபோன்ற கருத்துக்களை பதிவிட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ததால் தொடர் நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டன என வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதவ் அர்ஜுனா வழக்கறிஞர்,   புகாரில் சந்தேகம் இருந்தால் மட்டுமே ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும். புகாரில் முகாந்திரம் இருந்தால் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம். வெறுப்பு பேச்சு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சுட்டிக்காட்டியதுடன், இந்த விவகாரத்தில்,. புகார்தாரர் மீது உள்நோக்கம் கற்பிக்க முடியாது என்றார்.

இதையடுத்து பேசிய அரசு வழக்கறிஞர், ஆதவ் அர்ஜுனாவின் பதிவை முழுமையாக ஆய்வு செய்த உதவி ஆணையர் உத்தரவின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார்.

தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தனது பதில் வாதத்தில், எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டது வெறுப்பு பேச்சு வரம்பில் வராது. எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, 18 மணி நேரம் கழித்து தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் எந்த சம்பவங்களும் நடக்கவில்லை. சர்ச்சை ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே பதிவை நீக்கினார் என வாதிட்டார்.

ஆதவ் அர்ஜுனாவின் கருத்து வெறுப்பு பேச்சு அல்ல. அது அவரது பேச்சு கருத்து சுதந்திரம். பதிவின் இறுதியில் பாரதியார் கவிதையை பயன்படுத்தியுள்ளார் எனத் தெரிவித்தார்.

இதற்கு காவல் துறை தரப்பில், பாரதியார் கவிதையை பயன்படுத்தியதற்காகவே அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். யாரெல்லாம் பாரதியார் கவிதைகளை பயன்படுத்த வேண்டுமென்ற வரைமுறை இல்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, ஆதவ் அர்ஜுனா மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.