பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய இந்திய நாட்டுப் பாடல் ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது.
அக்ஷய நவமி தினத்தில் எழுதப்பட்ட இந்த பாடல் 1875 நவம்பர் 7ம் தேதி அன்று வந்த நவமியன்று எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பாடல் எழுதப்பட்ட 150 ஆண்டைக் குறிக்கும் வகையில் கர்நாடகா மாநிலம் ஹொன்னாவரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக எம்.பி. விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, நமது நாட்டு தேசிய கீதம் பிரிட்டிஷாரை வரவேற்க பாடப்பட்டது” என்று கூறினார்.

மேலும், “வரலாற்றை நான் தோண்ட விரும்பவில்லை. வந்தே மாதரத்தை தேசிய கீதமாக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கைகள் இருந்தன, ஆனால் அப்போது நமது முன்னோர்கள் வந்தே மாதரத்தையும் பிரிட்டிஷ் அதிகாரியை வரவேற்க இயற்றப்பட்ட ‘ஜன கண மன’த்தையும் வைத்திருக்க முடிவு செய்தனர். நாம் அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகிறோம்,” என்று தெரிவித்தார்.
நாட்டுப் பாடலான ‘வந்தே மாதரம்’திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ‘ஜன கண மன’வுக்கு இணையாக வைக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
“இந்த 150வது ஆண்டில், வந்தே மாதரம் அனைவரையும் சென்றடைய வேண்டும், அது பள்ளிகள், கல்லூரிகள், இளைஞர்கள் மற்றும் மக்களை சென்றடைய வேண்டும்,” என்று பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் நிர்வாகியுமான ப்ரியங்க் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஆர்.எஸ்.எஸ். வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தின் இன்றைய வரலாற்றுப் பாடம் இது, தேசிய கீதத்தை பிரிட்டிஷ் கீதம் என்று பாஜக எம்பி ககேரி கூறுவது முற்றிலும் முட்டாள்தனம்” என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் 1911 ஆம் ஆண்டு ‘பாரத பாக்யோ பிதாதா’ என்ற பாடலை எழுதினார் என்றும், அதன் முதல் சரணம் ‘ஜன கண மன’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் “இந்த கீதம் முதன்முதலில் டிசம்பர் 27, 1911 அன்று கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசில் பாடப்பட்டது – பிரிட்டிஷாரை வரவேற்று அல்ல,” என்று தெரிவித்துள்ளார்.
“‘பாரத பாக்யோ பிதாதா’ என்ற இந்தப் பாடல் ‘இந்தியாவின் விதியை தீர்மானிப்பவரை’ப் பாராட்டுகிறது, ஒருபோதும் ஜார்ஜ் V, ஜார்ஜ் VI அல்லது வேறு எந்த ஜார்ஜையும் குறிப்பிடவில்லை என்று 1937 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் ரபீந்திரநாத் தாகூரே தெளிப்படுத்தியுள்ளார்” என்று ப்ரியங்க் கார்கே தனது பதிவில் விளக்கியுள்ளார்.
“பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் சுயம்சேவகர்கள் ஆர்எஸ்எஸ் ஊதுகுழலான ஆர்கனைசரின் தலையங்கங்களைப் படித்துவிட்டு வரலாற்றைத் திரும்ப பார்க்க வேண்டும்.
அரசியலமைப்பு, மூவர்ணக் கொடி மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் ஒரு பாரம்பரியத்தை ஆர்எஸ்எஸ் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்று கடுமையாக சாடியுள்ளார்.