சென்னை: ஜப்பானுக்கே நாமதான்  (சென்னை) முன்னோடி  என கூறிய தமிழ்நாடு தொழில்துறை  அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ,  இந்தியாவில் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் 70% இருசக்கர மின்சார வாகனங்கள் மற்றும் 40% நான்கு சக்கர மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுபவை என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தை தொடர்பு கொண்டு,  திறன் சார்ந்த படிப்புகளை இந்தியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாலும் கொடுக்கலாம் என்றார்.

சென்னை, கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்பு விருதினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும்,  தேசிய கீதம் பாதியில் இருந்து இசைக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் இசைக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். அதன் பின்னர் மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட வேண்டும். இறுதியில்தான் தேசிய கீதம் பாட வேண்டும். அதுதான் சரியான முறை. எனவே அதனை பின்பற்ற வேண்டும்” என கோரிக்கையாக வைக்கிறேன் என்றார்.

 “இந்த நிகழ்ச்சிக்கு 4.30 மணிக்கு வருவதாக நான் கூறினேன். அதன்படி சொன்ன நேரத்திற்கு சரியாக வந்துவிட்டேன். இதைத்தான் கலைஞரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளனர்,” என்றவர்,  “இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில், தமிழ்நாட்டில் இருந்துதான் குறைந்தப்பட்சம் 42% ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாடுதான் மின்சார வாகனங்களின் தலைநகரமாக உள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர மின்சார வாகனங்களில் 70% வாகனங்கள், 40% நான்கு சக்கர வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. தமிழ்நாட்டின் கொள்கைகளே இதற்கு காரணம். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் கொள்கைகளால் தான் உள்ளன. மொத்தம் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. அதற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 28 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அளவிற்கு தரமாக உள்ளன.

ஏராளமான ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து இங்குள்ள தொழிற்சாலை அமைப்புகளை பார்வையிட்டு செல்கின்றன. ஒரு காரை எடுத்துக் கொண்டால் அதன் 42% பாகங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். சென்னைக்கு புறநகரில் ஆட்டோமொபைல் துறைக்காக ஒரு சிறப்பு மண்டலத்தை உருவாக்க திட்டம் உள்ளது.

ஜப்பானின் நிசான் மோட்டார்ஸ், தமிழ்நாட்டின் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து ஆட்டோ பொறியியல், டிப்ளமோ பயின்ற தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு ஜப்பான் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டு, பணிக்காக அவர்களை ஜப்பானுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஆட்டோமொபைல் துறையில் ஏராளமான ஆட்டோ ரிடெய்ல் ஸ்கில்லிங் போன்று திறன்சார்ந்த படிப்புகளுக்கான வேலைவாய்ப்பு உள்ளது. அதனை இளைஞர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்று ஒருவர் கோரிக்கை வைத்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தை தொடர்பு கொள்ளலாம். அத்தகைய திறன் சார்ந்த படிப்புகளை இந்தியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாலும் கொடுக்கலாம். ஆனால், இந்தியை திணிப்பைதான் எதிர்க்கிறோம். தமிழ்நாடு கண்டிப்பாக அதற்கு உதவி செய்யும். தமிழ்நாடு ப்ளூ காலர் வேலைகளில் இருந்து ஒயிட் காலர் வேலைகளுக்கு மாறி வருகிறது.

துறைசார்ந்த திறன்களுடன் வேலைக்காக பிற மாநிலங்களில் பெண்கள் இல்லையென்றாலும், தமிழ்நாட்டில் அதிகளவில் திறன்கொண்ட பெண்கள் உள்ளனர். அவர்களை ஆட்டோமொபைல் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”.

இவ்வாறு டிஆர்பி ராஜா பேசினார்.