சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். ஏற்கனவே 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின்கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன.
இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி இன்று வெளியிட்டார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த அட்டவணை விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி முடிவடைகிறது.
மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி முடிவடைகிறது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்த ஆண்டு முதன்முறையாக 12ஆம் வகுப்பு கணக்கு பதிவியல் தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் அல்லது மே நடைபெறும் என்பதால், பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். எனவே அதற்கு முன்னதாகவே பொதுத் தேர்வு பணிகள் அனைத்தும் முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்த பிறகே தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 8.70 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
