சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு நவம்பர் 17ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குகிறது.

மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் ரூ.5 விருப்ப கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மரணமடைந்தால் இந்த மண்டல காலம் முதல் அவர்களது குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நிதி திரட்டுவதற்காக இந்த விருப்ப கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் விருப்பமுள்ள பக்தர்கள் இந்த ரூ. 5 கட்டணம் செலுத்தலாம் என்றும் ஆன்லைனில் இதற்குத் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களில் சாலை விபத்துகளில் மரணமடையும் சபரிமலை பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் முதல் கேரளாவில் எந்தப் பகுதியில் நடைபெறும் விபத்துகளில் உயிரிழந்தாலும் இன்சூரன்ஸ் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து மாற்றங்களுடன் கூடிய முன்பதிவு நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.