டெல்லி என்சிஆர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர், குருகிராமில் உள்ள ஒரு சூப்பர் சொகுசு குடியிருப்பு திட்டத்தில் ரூ.380 கோடி மதிப்பிலான நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளார்.

இதற்கான பத்திர செலவு மட்டுமே ரூ. 19 கோடி என்றும் இது இந்தியாவில் இதுவரை நடந்த மிக உயர்ந்த விலைமதிப்புடைய குடியிருப்பு ஒப்பந்தங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில், அந்த தொழிலதிபர் ரூ.350 முதல் 400 கோடி வரையிலான பட்ஜெட்டில் லுட்யென்ஸ் டெல்லியில் பண்ணை வீடு அல்லது பங்களா வாங்கத் திட்டமிட்டிருந்தார்.

பின்னர் குருகிராமில் உள்ள இந்த சூப்பர் லக்சுரி குடியிருப்புகளைத் தேர்ந்தெடுத்தார்.

ரிசின் அட்வைசரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் க்ஷிதிஜ் ஜெயின், “இந்த ஒப்பந்தம் குறித்து முக்கியமான இந்திய வணிகக் குடும்பத்துக்கு நாங்கள் ஆலோசனை வழங்கினோம்” என்று தி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு கூறியுள்ளார். ஆனால் இதை வாங்கியவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

இந்த நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு 35,000 சதுர அடிக்கு மேல் பரப்பளவைக் கொண்டதாக இருக்கும். மும்பையைச் சேர்ந்த சில பங்கு முதலீட்டாளர்களும் இங்கு குடியிருப்புகளை வாங்கியுள்ளனர்.

மொத்தம் எட்டு கோபுரங்கள் மற்றும் 29 தளங்கள் என 420 குடியிருப்புகள் கொண்ட இந்தத் திட்டம், அண்மையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இதே இடத்தில் ரூ.69 கோடிக்கு 6,000 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார்.

2024-25 நிதியாண்டில், இந்தத் திட்டம் ரூ.13,744 கோடி மதிப்பிலான புதிய விற்பனை முன்பதிவுகளை பதிவு செய்துள்ளது.

2024ஆம் ஆண்டில் குருகிராம், லுட்யென்ஸ் டெல்லியை விட அதிக விலைமதிப்புடைய ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. ஒரு சதுர அடியில் விலை மும்பை, லண்டன், துபாய் போன்ற நகரங்களுடன் ஒப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளன.

கடந்த ஆண்டு குருகிராமில் ரூ.150 கோடிக்கு மேல் மதிப்புள்ள மூன்று சொத்து விற்பனைகள் நடந்துள்ளன. அவற்றில் ரூ.190 கோடிக்கு விற்கப்பட்ட பென்ட்ஹவுஸ், அந்த ஆண்டின் மிகப்பெரிய ஒப்பந்தமாகும்.

டெல்லியில் சொத்து விநியோகம் குறைவாக உள்ளதால், பல உயர்நிலை முதலீட்டாளர்கள் தற்போது குருகிராமை நோக்கிச் செல்கின்றனர்.