சென்னை: தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமானது நவம்பர் 5-ல் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.  இந்த கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று  தவெக-வின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமயில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன்,இணை பொதுசெயலாளர் சி.டி.ஆர் .நிர்மல்குமார், துணை பொதுச் செயலாளர்கள் ராஜ்மோகன், விஜயலட்சுமி உள்ளிட்ட 28 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணை பொதுசெயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்,  இந்த  நிர்வாகக் குழு கூட்டத்தில் தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நாங்கள் காத்திருந்தோம் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பின்னர், முதல்வர் கரூருக்கு வந்தார். உடனடியாக இறந்தவர்களில் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டன.

எங்கள் முதல் குற்றச்சாட்டு காவல்துறை மீது அதனால் நீதிமன்றத்தில் முறையிட்டோம். மக்கள் அனைவரும் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எங்களுக்கான துக்கம் 41 பேர் உயிர் இழந்தது மற்றபடி எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை எனத் தெரிவித்தார்.மேலும், நீதிமன்றம்  10 நாட்களுக்குள் வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு ம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி, வழிகாட்டு நெறிமுறைகள் வெளி வந்த பின் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து,   நவம்பர் 5-ல் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,‘ ”என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம், நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு. உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள். சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’, அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.

கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான். நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும்.
இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்

ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி, வருகிற 05.11.2025 புதன்கிழமை அன்று. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. சிறப்புப் பொதுக்குழுவில் வருங்காலம் நமதென்று காட்ட தீர்க்கமாகத் திட்டமிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்