சென்னை:  தமிழ்நாட்டில் SIR  தொடங்கப்பட உள்ள நிலையில், நேற்று மாலை (அக்டோபர் 29)  தலைமைத் தேர்தல் அதிகாரி உடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அறிக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையர் அர்சனா,  எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கும் என்றும், இதில்  ஏறக்குறைய 77,000 அதிகாரிகள் பணிபுரிவர் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆலேசானை கூட்டத்தில்,. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக, பாஜக, பாமக போன்ற கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)( தொடர்பாக தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  ஆலோசனை மேற்கொண்டார். இதில், கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது நிலைப்பாட்டை பதிவு செய்தனர்.

முன்னதாக,  பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்கட்டமாக  கடந்த ஆகஸ்ட் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மறைவு, இடம்பெயர்வு போன்ற காரணங்களுக்காக சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தீவிர வாக்காளர் பட்டியர் சீர்திருத்தம் பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் 2வது கட்டமாக எஸ்ஐஆர் நடவடிக்கை அக்டோபர் 4ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,.  தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஆளும்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேமுதிக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பிரிவு செயலாளர் என்.ஆர். இளங்கோ, கலந்து கொண்டனர்.  அதிமுகவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் கருநாகராஜன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், மாநில குழு உறுப்பினர் ஆறுமுகம் நைனார் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா மேரி, காங்கிரஸ் கட்சி சார்பில் செயற்குழு உறுப்பினர் தங்கபாலு, மாநில பொதுச் செயலாளர் செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா நிசாம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் பெரியசாமி, விசிக சார்பில் தேர்தல் பணிக்குழு செயலாளர் குணவழகன், துணைப்பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, தேமுதிக சார்பில் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் அணி செயலாளர் ஜனார்தனன், நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘அவசரகோலத்தில் SIR நடத்தப்பட உள்ளது. பெருமழை பெய்யக்கூடிய நேரத்தில் இந்தப் பணியை நடத்த திட்டமிட்டுள்ளனர். கிறிஸ்துமஸ், பொங்கல் விடுமுறை நாட்களில் மக்கள் வீட்டில் இருக்கமாட்டார்கள். வேண்டுமென்றே செய்வது போல் உள்ளது. யாரும் முழுமனதோடு இதனை ஏற்கவில்லை என்பதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைதள்ளி வைக்க வேண்டும்” என்றார்.

அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், ”தமிழகத்தில் ஒவ்வொரு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியின்போதும் இறந்தவர்கள் பெயரோ அல்லது குடிபெயர்ந்தவர்கள் பெயரோ நீக்கப்படுவதில்லை. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் உண்மை நிலை, வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணியினை அதிமுக வரவேற்கிறது.

ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவின் மூலம் நடத்திய ஆய்வில் தொகுதியில் இல்லாத 40 ஆயிரம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 8000 இறந்த வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இதேபோல் ஆர்.கே. நகர் தொகுதியிலும், ஆய்வு நடத்தியதில் தொகுதியில் இல்லாத 44 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இதனை ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை உரிய முறையில் செய்தால், ஒவ்வொரு தொகுதியிலும் இறந்த வாக்காளர்கள், குடிபெயர்ந்தவர்கள் முறையாக நீக்கப்பட்டு, முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்” என்றார்.

பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன்  பேசும்போது” எந்த ஒரு வாக்காளர்கள் பெயரும் விடுபட்டு விடக்கூடாது. இறந்தவர்களின் வாக்குகள் நீக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் வங்கி கணக்கு, தபால் கணக்கு உள்ளிட்ட 12 விதமான ஆவணங்களை கேட்கிறார்கள். 6 கோடி 41 லட்சம் வாக்காளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் படிவம் பெறப்பட்டு தேர்தல் ஆணையம் உறுதி செய்வார்கள். இவற்றை சீர்த்திருத்தமாக பார்க்க வேண்டும்.

இதை முதல்வர் எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்கிறார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறுகிறது. இது வரவேற்கத்தக்கது தான்” என்றார்.

விசிக துணைப்பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி கூறுகையில், “SIR தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன் பெயரில் விசாரணை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தேர்தல் ஆணையம் SIR செயல்படுத்த நினைப்பது தேவையற்றது. இதனை SIR ஆக பார்க்க முடியவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை வேறு வகையில் கொண்டு வருவதாக பார்க்க வேண்டியுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும். SIR -யை ஏன் எதிர்க்கிறோம் என்றால் பீகாரில் சிறுபாண்மை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு கூறியுள்ளோம்” என்றார்.

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் தங்கபாலு கூறுகையில், ”பீகாரில் SIR நடவடிக்கை சிறந்த முறையில் வெற்றி பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதனை நாங்கள் எதிர்க்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அவசர காலத்தில் ஏன் இதை செய்ய வேண்டும்? பெரும்பாலான கட்சிகள் இதனை எதிர்த்து இருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட வேண்டும். நேர்மையாக செயல்பட வேண்டும். உண்மைக்கு புறமாக செயல்படக்கூடாது. பொய்யானவர்களும் உள்ளே வரக்கூடாது. உண்மையான வாக்காளர்கள் விடுபடக்கூடாது. எல்லா வாக்காளர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

இந்த  ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ”இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2025, அக்டோபர் இறுதி வாரம் முதல் 2026, பிப்ரவரி முதல் வாரம் வரை நடைபெறவுள்ள இச்சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகள் முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரை ஏறக்குறைய 77,000 அதிகாரிகள் பணிபுரிவர்.

இந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கான தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இவ்வதிகாரிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வீடு வீடாக கணக்கெடுப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் ஆகியவற்றை கையாளும் முறைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 624 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 7234 வாக்குச்சாவடி நிலை அலுவலக மேற்பார்வையாளர்கள், 68,472 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கு பெறுவர்.

இந்த பயிற்சிகள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளால் நடத்தப்படும்.

இச்சிறப்பு தீவிர திருத்தத்தில் ஈடுபடும் அதிகாரிகள் இத்தீவிர திருத்தத்தின் செயல்முறையை நன்கறிந்து கொள்வதையும், மாநிலம் முழுவதும் இச்செயல்முறையை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.