சென்னை : உயர்கல்வியில் தமிழ்நாடு சிறக்க திராவிட இயக்கங்களே காரணம் சென்னையில் நடைபெற்ற திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் முப்பத்து மூன்றாவது பட்டமளிப்பு விழா இன்று சென்னை ஆர்வார்பேட்டை பகுதியில் உள்ள மியூசிங் அகாடமியில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக தலைவர்களுடன் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
முன்னதா விழாவுக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினை மேலாண்மை கல்வி நிறுவன தலைவர் மற்றும் பேராசிரியர்கள் குழுவினர் வரவேற்றனர். இதையடுத்து, மேடைக்கு முதல்வர் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. வரவேற்புரை முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
இதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார். அப்போது,”இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்த இடத்துக்கு செல்வதற்கு காரணம் திராவிட இயக்கம்தான். மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என்றார்.
பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் இந்திய அளவில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது என பெருமையாக கூறினார். மேலும், பாரதிதாசன் பல்கலையில் பயின்ற மாணவர்கள் சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளனர் என்று சுட்டிக்காட்டிய முதல்வர், உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதையும் நினைவுபடுத்தினார்.
ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் இன்று படித்து முன்னேற காரணம் திராவிட இயக்கம் என்றவர், உயர்கல்விக்கு என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி. கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு என்று புகழாரம் சூட்டியவர், உலகம் எந்த வேகத்தில் மாற்றமடைகிறதோ அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து நாமும் ஓட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தலைமைத்துவம் என்பது ஒருவர் ஏற்படுத்தும் தாக்கம் தான் என்று கூறியதுடன், அடுத்து நடக்கப் போவதை கவனிப்பவர்கள் தான் எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும். சிறப்பான திட்டமிடல் இல்லாமல் எந்த செயலிலும் இறங்க கூடாது என்கிறார் வள்ளுவர் என்று குறிப்பிட்ட முதல்வர், எங்கு சென்றாலும் அன்போடு, அறத்தோடு செயல்பட வேண்டும். சோதனையான காலத்திலும் நேர்மை, நம்பிக்கை, பொறுமையை கைவிட கூடாது. உயர்ந்த சிந்தனை தான் வெற்றி பெற உதவும். நேர்மை தான் அறிவை அளவிட உதவும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறியதுடன், வெற்றி பெறும் மாணவர்கள் தங்களுக்கு பின்னால் படித்து வரும் மாணவர்களை கைதூக்கி விட வேண்டும்.
இன்றைய நவீன உலகத்தில் பல்வேறு பன்னாட்டுப் பெரு நிறுவனங்களின் சி.இ.ஓ.-க்களாக நீங்கள் வர வேண்டும்! பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை, கனவு எல்லாம்!
இவ்வாறு கூறினார்.