டெல்லி: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நவம்பரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்  தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக  2026ல்  தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில்  தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,  ‘இந்தியா முழுவதும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கப்பட உள்ளது.

முதல்கட்டமாக அடுத்த ஆண்டு (2026-ல்) சட்டமன்ற  தேர்தல் நடக்கும் மாநிலங்களில்  நவம்பரில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) செய்வதற்கான தயாரிப்புகளை மதிப்பிடுவதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரிகளை  கொண்ட தேர்தல் ஆணைய கூட்டம் கடந்த   அக்டோபர் 22ந்தேதி (புதன்கிழமை)  கூட்டியது. இது, எஸ்ஐஆர் குறித்து ஒரு மாதத்திற்கும் மேலாக ஆணையம் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் நடத்திய இரண்டாவது கலந்துரையாடலாகும்.

இந்த கூட்டத்தில்,  வாக்காளர்கள் தங்கள் தகுதியை நிலைநாட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய வாக்காளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, தற்போதைய வாக்காளர்களை அந்தந்த மாநிலங்களில் கடைசியாக நடந்த தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியல்களுடன் முடிந்தவரை பொருத்தும்படி தலைமைத் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. மேலும்,  முதற்கட்ட வாக்கார் சீர் திருத்தம் நவம்பரில் தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, அடுத்த ஆண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா, அசாம், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் பணி (SIR) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பீகார் போல கெடுபிடிகள் விதிக்கப்படாமல் சில தளர்வுகளை வழங்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 6-ம் தேதி பீகார் சட்டமன்றத் தேர்தல்களை அறிவிக்க நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கூறிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அகில இந்திய எஸ்.ஐ.ஆர் பற்றி கேட்கப்பட்டபோது, தலைமைத் தேர்தல் ஆணையர்: “நீங்கள் ஜூன் 24 உத்தரவைப் பார்த்தால், அகில இந்திய எஸ்.ஐ.ஆர் நடத்துவதற்கான முடிவை தேர்தல் ஆணையம் ஏற்கனவே எடுத்துவிட்டது. பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தேதிகளைத் தீர்மானிக்க ஆணையம் ஒரு கூட்டத்தை நடத்தும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஐஆருக்கு,   வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருக்கப் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களும் கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்ய வேண்டி யிருந்தது, அதே சமயம் 2003-க்குப் பிறகு  பதிவுசெய்தவர்கள் தங்கள் பிறந்த தேதி மற்றும்/அல்லது பிறந்த இடத்தைப் நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இது அவர்களின் குடியுரிமை உட்பட வாக்காளர்களுக்கான தகுதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இருந்தது. இதில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.