சென்னை: தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியார்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் அக்டோபர் 16ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதுடன், பல பகுதிகளில் பயிர்களும் மழை நீரில் மூழ்கி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்ழுத்த தாழ்வுமண்டலம் வலுப்பெற்றுள்ளது. மேலம் அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தாழ்வு நிலை காரணமாக, தென்மாவட்டங்கள் மட்டுமின்றி வடமாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. இன்றும்., நாளையும் 25 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அந்தந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் டெல்டா மாவட்டங்கள் ஆகியவற்றின் கலெக்டர்களுடன் முதல்வர் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். பேரிடர் மேலாண்மை நிர்வாகிகள், தலைமை செயலாளர் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்தஆலோசனை கூட்டத்தில், மழை அதிகமாக பெய்துள்ள மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டமுதல்வர், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினார். மேலும், முகாம்களில் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் ஆலோசனை நடைபெற்றது.