பாங்காக்கில் உள்ள சியாம் சதுக்கத்தில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி வடிவ லைட்டரைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோவோடெல் ஹோட்டல் முன் கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் சாஹில் ராம் ததானி, 41, என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

செய்தி ஊடகங்கள் காட்டிய வீடியோவில், அவர் சத்தமாக குரல் எழுப்பி நடந்து செல்வதையும், துப்பாக்கி வடிவ பொருளை பொதுமக்களை நோக்கிக் காட்டுவதையும் காட்டியது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரை மடக்கிப் பிடித்த நிலையில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அவர் ஒப்படைக்கப்பட்டார்.

பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் வந்தபோதும் கட்டுப்படாமல் செயல்பட்ட அவர் தனது கையில் இருந்த பொருளைக் கொண்டு அதிகாரிகளை மிரட்டினார், அது பின்னர் சிகரெட் லைட்டர் என்று கண்டறியப்பட்டது.

பின்னர், ததானி, பாதும்-வான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் மீது அச்சுறுத்தும் நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கஞ்சாவை உட்கொண்டதால் ஏற்பட்ட போதையின் விளைவாக அவர் இவ்வாறு செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவர் இந்தியாவில் மூன்று நிறுவனங்களின் இயக்குநராக இருந்ததாகவும், அந்த நிறுவனங்கள் அனைத்தும் தற்போது மூடப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.