சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில்,   எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ரதுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் எப்போதும்போல இந்துக்கள் பண்டிகை என்பதால் வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை.

தீபாவளி திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி  விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில், சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும்; தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது. இந்த இனிய நன்னாளில் மக்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில் தங்களது இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும் உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும் ட இனிப்புகளைப் பகிர்ந்து உண்டும் உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நூய வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும்தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இதுதான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

தீப ஒளியின் மகிழ்ச்சி மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் கிடைப்பதாக இருக்கக் கூடாது. ஆண்டு முழுவதும் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைப்பதை உறுதி செய்வதுதான் அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். ஆட்சியாளர்களால் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை என்றால், அதை சாத்தியமாக்கும் திறன் யாருக்கு இருக்கிறதோ, அவர்களை ஆட்சியாளர்களாக்க வேண்டும். அதன்மூலம் மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளி திருநாள், நெருங்கி வரும் வேளையில், இந்த தீப ஒளி நாளை வரவேற்க உற்சாகமாக காத்திருக்கும் நம் பாரத மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

நமது பாரத தேசத்தை கட்டமைக்கும் அரும்பணியில் ஈடுபட்டிருக்கும் உழைக்கும் மக்களின் இல்லங்களில் மகிழ்ச்சி ஒளி பரவட்டும்!

நம் பாரதத்தின் அனைத்து மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒளி நிறையட்டும்! அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்பாக இந்த தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ” உலகெங்கிலும் உள்ள மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

அனைத்துத் தர மக்களையும் பெருந்துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அகன்று, நாட்டு மக்கள் அனைவரும் இன்புற வரும் காலங்களில் நல்லாட்சி அமைய வேண்டும் என்று இந்த இனிய நாளில் சூளுரைப்போம்.

நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் ” என கூறப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘தீபங்களின் திருவிழாவான தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் நல் வாழ்த்துகள்.

இயந்திர வாழ்க்கையில் சந்திப்புகள் குறைந்து போன உறவுகள் கூடிக் குலவவும், உள்ளங்கள் மகிழ்ந்துறவாடவும் விழாக்கள், கொண்டாட்டங்கள் ஊக்கமளிக்கின்றன. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்தை பாதுகாக்கும் பண்டிகைகள் மனிதர்கள் வாழ்வில் மலர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.

மக்களிடையே மனித நேயம் மலர்ந்திட, மாற்றங்கள் தொடர்ந்திட, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட, அன்பு, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை பெருகிட, இல்லாமை எனும் இருள் விலகி, இன்ப ஒளி பிரகாசித்து, இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பும், ஆனந்தமும் செழித்து, மக்கள் யாவரும் மாசில்லா தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில், “ இந்த தீபாவளியில் வலிமையான பாரதம் அமைந்திருப்பதால் அடுத்த தீபாவளிக்கு வளமான தமிழகம் அமைய வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும், உள்நாட்டின் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமைத்திறன் தீபாவளி ஒளியாக அமைந்து நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. அதே போல அடுத்த ஆண்டின் தீபாவளியில் வளமான தமிழகம் அமைந்திருக்க இருள்நீக்கி ஒளி தரும் தீபாவளி நல்வழிக் காட்டட்டும். தமிழக மக்களுக்கு சுமைகள், தீமைகள் நீங்கி, நன்மைகள் நிறைந்து, இன்பங்கள் மிகுந்து, வாழ்வு சிறக்கும் வகையில் தீபாவளி திருநாள் அமைய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

மேலும்,  முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் டாக்டர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் ஆ.மணி அரசன், தமிழ்நாடு மண்பாண்ட குலாலர் சங்கம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம.நாராயணன் ஆகியோரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.