கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலாஜி இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ மூலம் அந்தப் பகுதியில் பிரபலமாகி இருந்தார்.
பாலாஜி மற்றும் அவரது நண்பர் கோவிந்தராஜ் ஆகியோரின் காமெடி வீடியோக்களைப் பார்த்து அவரது இன்ஸ்டா பக்கத்திற்கு சுமார் 1.15 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பாலாஜியைத் தொடர்பு கொண்ட ஒருவர், “பாண்டியன் கிராக்கர்ஸ்” பட்டாசு கடையின் தீபாவளி விளம்பரத்திற்காக ப்ரமோஷன் வீடியோ செய்யச் சொல்லிக் கேட்டுள்ளார்.

அதற்காக ₹35,000 தருவதாகக் கூறியதை அடுத்து இன்ஃப்ளுயன்ஸ் ஆன பாலாஜி விளம்பரத்திற்காக ஒப்பந்தம் செய்து கூகுள் பே மூலம் பணம் பெற்றுக்கொண்டார்.
இந்த விளம்பரத்தைப் பார்த்த இவரது ஃபாலோயர்ஸ் சிலர் “பாண்டியன் கிராக்கர்ஸ்”-சில் பட்டாசு ஆர்டர் செய்துள்ளனர்.
தீபாவளி நெருங்கியும் பட்டாசு வராததால் ‘பாலாஜி இருக்காரா’ என்று கேட்டுத் தொடர்பு கொண்ட ஆர்டர் செய்த அவரது ஃபாலோயர்ஸ் விவரத்தைக் கூறியுள்ளனர்.
அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள பாலாஜி முயற்சித்த போது முடியாமல் போனதை அடுத்து அவர்களது இணையதளம் மற்றும் செயலியும் சேவையில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து ஃபிஷிங் மோசடியில் தான் சிக்கியதை உணர்ந்த பாலாஜி இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
“இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர் பாண்டியன் கிராக்கர்ஸ் மேனேஜர் என்று கூறி தங்கள் நிறுவனத்திற்காக பட்டாசு விளம்பரம் செய்து தரக் கூறினார்.
சிவகாசி அனுப்பன்குளம் பகுதியிலிருந்து மேட்டூர் சர்வீஸ் பார்சல் மூலம் பட்டாசுகள் அனுப்பப்பட்டன” என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.
பாலாஜி, அவரது நண்பர்கள் கோவிந்தராஜ், பூமணி, முத்து, நந்தகுமார், ரோஷன் ஆகியோர் சேர்ந்து அந்தப் பட்டாசுகளைப் பயன்படுத்தி விளம்பர வீடியோவை எடுத்து, இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றினர்.
வீடியோவில் ஆன்லைன் ஆர்டர் செய்யும் வெப்சைட் லிங்க், ஸ்கேனிங் கியூஆர் கோட், மூன்று செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
இதன் விளைவாக, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ₹3,000 முதல் ₹50,000 வரை பலர் ஆன்லைனில் பட்டாசுகளைப் புக் செய்தனர்.
1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது.
“பட்டாசு நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி ₹30,000க்கு தானும் ஆர்டர் செய்திருப்பதாக” பாலாஜி புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மாவட்ட வாரியாக அதிக ஃபாலோவர்கள் உள்ள இன்ஸ்டா பக்கங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஃபாலோவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பணம் கொடுத்து விளம்பரம் செய்யச் சொல்லி ஒரு கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
‘பாலாஜி இருக்காரா’ என்ற இன்ஸ்டா பக்கம் தவிர பெங்களூரு ‘அம்மாவா ட்ரோல்’, வேலூர் ‘பன்னீர் செல்வம்’, ‘வேலூர் 2.0’ போன்ற பக்கங்கள் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள், ஆந்திரா-கர்நாடகாவிலும் “பாண்டியன் கிராக்கர்ஸ்” பட்டாசு விளம்பரம் பரவியது.
மேலும் இந்த மோசடி கும்பல் இதுவரை சுமார் ₹15 கோடி வரை ஏமாற்றியதாகத் தெரியவந்துள்ளது.