டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து எங்கள் விவாதங்கள் நடைபெற்றன. நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது ஒத்துழைப்பு மகத்தானது என குறிப்பிட்டு உள்ளார்.

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தியா வருகை தந்தார். இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பின்பு, பிரதமர் ஹரிணி அமரசூரிய முதல் முறையாக, இந்தியா வந்துள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர் இலங்கையின் கல்வித் துறை அமைச்சரகாவும் பதவி வகிக்கிறார்.
இந்தியா வந்துள்ள அமரசூரியா, டெல்லியில் உள்ள ஐஐடி மற்றும் என்ஐடிஐ ஆகிய கல்வி நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், என்டிடிவியின் உலக மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர், அவர் படித்த டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதைத்தொடர்ந்து, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி – திறன் மேம்பாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் பற்றி அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இலங்கை பிரதமர், டெல்லியில் தான் படித்த இந்து கல்லூரிக்கு சென்றார். பின்னர் இந்த நிலையில் இன்று ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமையான கண்டுபிடிப்புகள், மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லி இந்து கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, கடும் பொருளாதார சிக்கலில் இலங்கை தவித்தபோது இருண்ட காலத்தில் உதவிசெய்யும் உற்ற நண்பராக இந்தியா மேற்கொண்ட உதவிகளை மறக்க இயலாது. நம்மைப் போன்ற சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படும் பொதுக் கல்வியானது நாட்டின் உயா்பதவிகளை அடைய வழிவகுப்பதே இலங்கை மற்றும் இந்திய ஜனநாயகத்தின் அழகு.
இருநாடுகளுக்கும் இடையே நீண்ட பாரம்பரிய மற்றும் கலாசார உறவும் பரஸ்பர மரியாதையும் உள்ளது. சில விவகாரங்களில் முரண்பாடுகள் இருப்பினும் இருநாடுகளும் எப்போதும் ஒரே குடும்பமாகவே இருந்து வருகின்றன.
எனவே, இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை மண்ணில் இருந்து மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது நாடுகளுக்கு இடையில் எப்போதும் பாலங்களை கட்டுங்கள்; தடைகளை உருவாக்காதீா்கள் என்றாா்.
பிரதமராக பதவியேற்றபின் முதல்முறையாக இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள ஹரிணி அமரசூா்யா டெல்லி இந்துக் கல்லூரியில் 1994-இல் சமூகவியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.