சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை  என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வரும் 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 25ந்தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு சொந்த ஊரில் கொண்டாடும் வகையில், பணி நிமித்தம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.  இதனையொட்டி சென்னை, கோவை உள்ளிட்ட வெளி இடங்களில் கல்வி, வேலை ஆகியவற்றுக்கான தங்கியுள்ளவர்கள் தங்கம் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி திங்கட்கிழமை வருவதால், அன்றைய தினம் தீபாவளியை கொண்டாடிவிட்டு, உடனே திரும்ப முடியாது என்பதால், அடுத்த நாளான 21ந்தேதியும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதை ஏற்று அரசு 21ந்தேதி விடுமுறை அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.