சென்னை: தமிழ்நாடு அரசு கட்டிட விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீடுகளில் இருசக்கர வாகனம் பார்க்கிங் மற்றும் நான்கு சக்கர வாகன பார்க்கிங் கட்டாயம் என குறிப்பிட்டுள்ளது.

சென்னை உள்பட பல பகுதிகளில், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காண முடியும். இதன் காரணமாக, வீட்டின் உரிமையாளர்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் நடை பெற்று வருவதும் வாடிக்கையாக உள்ளது. தெருவோரங்களில் வாகனங்கள்நிறுத்தப்படுவதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருகி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாதவாறு, வீடு கட்டும்போது கட்டாயம் பார்க்கிங் வசதி மேற்கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது, பார்க்கிங் அமைப்பது தொடர்பாக புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தனி வீடுகளுக்கு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக விதிகள் வகுக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. “பொது கட்டட விதிகளில் தனி வீடுகளுக்கான வாகன நிறுத்துமிடம் தொடர்பாக, சில பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019-ல் திருத்தம் செய்துள்ளது. இதன் மூலம், பெரிய குடியிருப்பு கட்டிடங்களுக்குத் தேவையான பார்க்கிங் இடத்தைக் குறைத்துள்ளது. இந்த திருத்தம் அக்டோபர் 10 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 3,200 சதுர அடி (300 சதுர மீட்டர்) அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவில் கட்டப்படும் வீடுகளுக்கு, குறைந்தது நான்கு கார்கள் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் இடம் ஒதுக்கினால் போதும். இந்த விதி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து குடியிருப்பு கட்டிடங்களுக்கும் பொருந்தும்.
அதன்படி, 3,300 சதுர அடி வரையிலான பரப்பளவுள்ள தனி வீடுகளில், இரண்டு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடத்தை ஒதுக்க வேண்டும்.
இதேபோன்று, 3,300 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவுள்ள வீடுகளில், நான்கு கார் நிறுத்துமிடம், நான்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும்.
அப்பார்ட்மென்ட் கட்டிடங்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில், இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
‘இன் பில்டிங் சொல்யூஷன்ஸ்’ என்ற தலைப்பில், இணையதள சேவை மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் அமைக்கலாம். இதில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்ச கத்தால் வரையறுக்கப்பட்ட முகவரை பயன்படுத்தி, தொலைத் தொடர்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தலாம் என, பொது கட்டட விதிகள் திருத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.