சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு , கூட்டுறவுத்துறை மற்றும் ஆவின் ஊழியர்களுக்கும் 20% தீபாவளி போனஸ் அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.

ஆவின் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 20 சதவிகிதம்  தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பால்வளத்துறை ஊழியர்களுக்கும் கூட்டுறவுத்துறை ஊழியர் களுக்கும் 20% போனஸ் வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி, தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2024-25ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத்தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம்,  தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 ஊழியர்களுக்கு இந்த போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.  போனஸ் மற்றும் கருணைத்தொகைக்கான மொத்தம் ரூ.44.11 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு உபரித் தொகையில் இருந்து போனஸ் வழங்கப்படும்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்,   தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியளார்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் 8.33 விழுக்காடு மற்றும் 11.67 விழுக்காடு கருணை தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தின் அலுவலகக் கூட்டரங்கில் சி மற்றும் டி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியளார்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் 3,258 பணியாளர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான ரூ.4.74 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகையை வழங்கிடும் வகையில் 18 பணியாளர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜான் லூயிஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்: தமிழக அரசு ஆணை

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
“தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில்(டாஸ்மாக்) பணிபுரியும் 2024-25 ஆண்டுக்கான மிகை ஊதியம் பணியாளர்களுக்கு (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025-2026-ல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையானது, 2024-25-ம் ஆண்டுக்கான பணியாளர்களுக்கு, எதிர்வரும் 2025-2026-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதற்காக வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களான மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப் பணியாளர்கள் 24,816 தகுதியுடைய நபர்களுக்கு 20 சதவிகிதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். இதற்காகத் தமிழக அரசுக்கு மொத்தம் ரூ. 40.62 கோடி செலவாகும்.

அரசின் இந்த நடவடிக்கையானது, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் மிகவும் ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் தொடர்ந்து பணியாற்றுவதையும், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதையும் உறுதி செய்யும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.