சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த  நிலையில்,  தமிழகத்தில்  சென்னை மற்றும் தென்மாவட்டங்கள்   16 மாவட்டங்களில் அடுத்த சிலமணி நேரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று (அக் 16ந்தேதி) காலை வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடியவிடிய பரவலாக மழை பெய்து வருகின்றது.  தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டி வருகிறது. இதனால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் முடங்கி உள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று முற்பகல் வரை மழை கொட்டியது. இதனால், சென்னைவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்,  இன்று அதிகாலை முதல் சென்னையின் பல பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டி வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.  வடசென்னையின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு உள்ளது.  அதிகாலை முதல் மழை கொட்டி வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறையா என பொதுமக்கள் , பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் போனில் கேட்டு வந்தனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில், சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று  காலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.