சென்னை: மாடு மேய்ப்பவன் கூட இப்படி பேசமாட்டான்.  தலைமை பண்பு இல்லாதவர் அன்புமணி என உடல்நலம் தேறிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் என்று கூறிகொள்ளும் அன்புமணி ராமதாசை கடுமையாக சாடியுள்ளார். மேலும்,  ஒரு கட்சி மட்டும் என்னை நலம் விசாரிக்கவில்லை என்பதையும் பதிவு செய்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் ராமதாஸ் கடந்த 5 ஆம் தேதி  அன்று திடீரென சென்னையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் ரெகுலர் செக்கப்புக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது .அவருக்கு இதய பரிசோதனை மற்றும் ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதியான நிலையில்,  அக். 7 ஆம் தேதி வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் ராமதாசை,  முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.  அன்புமணியை சந்திக்க ராமதாஸ் மறுத்துவிட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,  டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு  ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது. பயப்படுவதற்கு எதுவும் இல்லை. அய்யாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும். தொடர்ந்து கொடுக்கின்ற மாத்திரைகளை எடுக்க வேண்டும். மற்றபடி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றவர், அவரை சந்தித்தீர்களா என்ற  செய்தியாளர்களின் கேள்விக்கு,  ஐசியூவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், “தமிழ்நாட்டில் இருக்கின்ற முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி, பொதுவாழ்விலே இருப்பவர்கள் எல்லோரும் நேரிலே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிலர் நேரிலும் சிலர் தொலைபேசியிலும் நலம் விசாரித்தார்கள். ஆனால் ஒரு கட்சியைத் தவிர, அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி” என்று கூறினார்.

பின்னர்  அன்புமணி ராமதாசை ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு  பதிலளித்த ராமதாஸ், “நான் ஐசியு-வில் இல்லை. அப்படிப்பட்ட நிலைமை எனக்கு ஏற்படவில்லை . அந்த வார்டுக்கு நான் போகவும் இல்லை. இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றவர்,

படிக்காத ஒரு மாடு மேய்க்கிற சிறுவன்கூட இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசியிருக்க மாட்டான். அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்று நிர்வாகக் குழுவிடம் ஒருமுறை சொன்னேன். அது இன்று உறுதியாகிவிட்டது. அன்புமணிக்கும் பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறினார்.

வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.