சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளே தென்மாவட்டங்களில் அதகளம் செய்துள்ளது. பல பகுதிகளில் மழை 100 மி.மீட்டருக்கு அதிகமாக செய்து மக்களை திணற அடித்துள்ளது.

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளை அதிக அளவில் மழைபெய்யும் காலமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை 16ந்தேதி தொடங்குவதாக அறிவித்த நிலையில், நேற்று இரவு முதலே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட பல பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி கடலோர பகுதிகள் மழை அளவு இதுவரை இல்லாத அளவாக 100 மி.மீட்டர் பதிவாகி உள்ளது. இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென் தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி, பல பகுதிகளில் 100 மி.மீ-க்கும் (10 செ.மீ) அதிகமான மழை பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 146.00 மி.மீ மழை பதிவானது.
காயல்பட்டினம் (திருச்செந்தூர் தாலுகா) 154.00 மி.மீ மழை பதிவாகி, அதிக மழையைப் பெற்ற பகுதியாக உள்ளது. மேலும், ஸ்ரீவைகுண்டம் (56.20 மி.மீ), சாத்தான்குளம் (84.00 மி.மீ), ஓட்டப்பிடாரம் (54.00 மி.மீ) ஆகிய பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளது.
தொடரும் மழையும் அடுத்து வரும் நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு குறித்தும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரப்படி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்றும் கனமழை தொடரும் என்றும், அதன் பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்த இரு மாவட்டங்களின் உட்புறப் பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று நண்பகல் முதல் மாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஒருநாள் பெய்த மழைக்கே நெல்லை, திருச்செந்தூர், காயம்பட்டினம் போன்ற பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.