டெல்லி: தமிழ்நாடு அரசு புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கி உள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர் ஆர்.ரவி.க்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின்  பல்கலைக்கழக வேந்தர் உள்பட  பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி  வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது. இது விவாதங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, குடியரசு தலைவர் இது தொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கம் கோரி யிருக்கிறார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு  விசாரணை முடிவடைந்து, தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய புதிய பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை, அனுமதி வழங்காமல் இருப்பதுடன், அந்த மசோதாக்களை குடியரசு தலைவர் பார்வைக்கு அனுப்பி உள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு,   விளையாட்டு பல்கலைக்கழக குழுவில் நிதித்துறை செயலாளர் நியமிப்பது மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும் மாற்றுதிறனாளிகள் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியின்மையை நீக்க முடிவு செய்யும் வகையில , தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் சட்ட திருத்த மசோதா 2025 கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி நிறைவேற்றி இருந்தது. அதுபோல சித்தமருத்துவ பல்கலைக்கழகம்  மசோதாவும் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், மறைந்த  முன்னாள் முதல்வர், எம்.கருணாநிதியின் பெயரிடப்பட்ட கலைஞர் பல்கலைக்கழகம் கும்பகோணத்தில் நிறுவப்படும் என்று தமிழக அரசு   அறிவித்தது. பெரும்பாலான மாநில நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களைப் போலவே, வேந்தரே ஆளுநர் அல்ல, முதலமைச்சராக இருப்பார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய பல்கலைக்கழகம் 2025-2026 கல்வியாண்டில் செயல்படத் தொடங்கும், மேலும் வளமான காவிரி டெல்டா பகுதியில் உள்ள அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கும். திருச்சிராப்பள்ளியை தளமாகக் கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைப் பிரித்து இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்படும், இது தற்போது எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியது. மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், இரண்டு பல்கலைக்கழகங்களும் தலா நான்கு மாவட்டங்களை உள்ளடக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக கும்பகோணம் இருப்பதால், அதன் பெயரிடப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு கும்பகோணம் தேர்வு செய்யப்பட்டது.

அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரங்களை ஆளுநரிடமிருந்து அரசுக்கு மாற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, திமுக அரசால் நிறுவப்படும் முதல் பல்கலைக்கழகம் இதுவாகும். அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் அரசாங்கத்திற்கு இப்போது அதிக அதிகாரங்கள் இருந்தாலும், ஆளுநர் தொடர்ந்து வேந்தராக இருக்கிறார். இருப்பினும், புதிய பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, ஆளுநருக்கு எந்தப் பங்கும் இருக்காது, அனைத்து கட்டுப்பாடும் முதலமைச்சர் மற்றும் அரசாங்கத்திடம் இருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆளுநர் கூட்டிய கூட்டத்திலிருந்து விலகிய சிறிது நேரத்திலேயே இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

இந்த  சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க கோரி கோப்புகளை தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு அரசு அனுப்பி வைத்திருந்தது ஆனால் இந்த மசோதாக்களை  ஆளுநர் இதுவரை அனுமதி வழங்காமல்,  குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு   எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக ஆளுநரின் இந்த முடிவு அரசியல் சாசனத்தின் பிரிவு 200 மீறும் வகையில் இருக்கிறது என்றும் எனவே ஆளுநரின் நடவடிக்கைகளை சட்டவிரோதம் என அறிவிப்பதுடன் தன்னிச்சையானது எனவும் அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

மேலும் தமிழக அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களை தமிழக ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கிறது எனவும் தமிழக அரசு மனுவில் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. இந்த மனுமீது   நாளை விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.