சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. . இன்று 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தீவிர மழை காரணமாக 3 மாவட்டங்களில் இன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதலே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்றைய தினம் (16.10.2025) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
எனவே, இந்த 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் இயங்காது. உத்தரவை மீறி வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை:
தமிழகத்தில் இன்றைய தினம் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான – கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.