‘இந்தியாவில் யானைகளின் நிலை: டிஎன்ஏ அடிப்படையிலான ஒத்திசைவான அகில இந்திய யானை மதிப்பீடு’ (SAIEE 2021-25) என்ற அறிக்கையை இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) செவ்வாயன்று வெளியிட்டது.

இதில் இந்தியாவின் காட்டு யானைகளின் எண்ணிக்கை 22,446 என்று கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டின் 27,312 மதிப்பீட்டை விட தோராயமாக 17% குறைவு.

இருந்தபோதும், இதற்கு முன் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அல்லது அதன் சாணத்தை வைத்து மதிப்பீடு செய்யப்பட்டது.

ஆனால் இம்முறை டிஎன்ஏ அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இரண்டு புள்ளிவிவரங்களையும் நேரடியாக ஒப்பிட முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், ப்ராஜெக்ட் எலிஃபண்ட் மற்றும் WII இணைந்து நடத்திய இந்த கணக்கெடுப்பு, இந்தியாவின் முதல் DNA அடிப்படையிலான யானை எண்ணிக்கை ஆகும்.

டேராடூனில் நடந்த WII இன் ஆண்டு ஆராய்ச்சி கருத்தரங்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டின் யானைகளின் எண்ணிக்கையை 18,255 முதல் 26,645 வரையிலான வரம்பிற்குள் வைக்கிறது, சராசரியாக 22,446 என்று தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு 6.7 லட்சம் கி.மீ. வனப் பாதைகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பின்படி, ஆராய்ச்சியாளர்கள் யானை வாழ்விடங்களில் 21,056 சாண மாதிரிகளைச் சேகரித்தனர்.

இந்த சாண மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ சோதனைகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் 4,065 தனித்துவமான யானைகளை அடையாளம் கண்டுள்ளனர்.

2021ம் ஆண்டு முதலே மரபணு முறைப்படி மதிப்பீடு தொடங்கியபோதிலும் தரவு சரிபார்க்க அதிக காலம் ஆனதால் இதன் அறிக்கை தாமதமாகவே வெளியிடப்பட்டுள்ளது.

SAIEE அறிக்கையில், மனித-யானை மோதல், வாழ்விட இழப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களால் காடுகள் சுருங்கி வருவது ஆகியவற்றிலிருந்து வரும் அச்சுறுத்தல்களே எண்ணிக்கையில் சரிவுக்குக் காரணம் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சுருங்கி வரும் வாழ்விடங்களும், அடைக்கப்பட்ட வழித்தடங்களும் யானைகளை மனித பகுதிகளுக்குள் கட்டாயப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது, இதனால் மின்சாரம் தாக்குதல், ரயில் விபத்துகள் மற்றும் பழிவாங்கும் கொலைகள் போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.