சென்னை; உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரயில்வே காவல்துறைக்கும் அறிவுறுத்தி உள்ளது.

ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி, முன்பதிவு செய்தவர்களின் இருக்கைகளை ஆக்கிரமித்து அமர்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரள மாநில மக்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் முன்பதிவு செய்து வரும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தெற்கு ரயில்வேயிடம் புகார்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
முன்பதிவில்லாத பெட்டிகளில் தடுப்புகள் அமைத்து பயணிகளை வரிசையில் நெறிப்படுத்தி இரண்டாம் வகுப்பு இருக்கைகளில் அமர ஏற்பாடு செய்ய வேண்டும்
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் மற்ற பயணிகள் ஏறுவதை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் அனைத்து விரைவு ரயில்களிலும் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும்
வட மாநிலம் செல்லும் ரயில்கள் மற்றும் தொலைதூரம் செல்லும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் முன்பதிவு பெட்டிகளின் பயணம் மேற்கொள்ளும் பயனாளர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் ..
அதாவது ஒவ்வொரு முக்கிய நிறுத்தங்களையும் டிக்கெட் பரிசோதர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் …
முன்பதிவு பெட்டிகளின் பயணிகளின் புகார்களுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் நேரில் சென்று உடனடியாக சோதனை செய்வதோடு விதிகளை மீறி பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் .
மீறும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு துறை சார் நடவடிக்கை தீவிரபடுத்தபடும்
தேவைப்பட்டால் பயணிகள் தொடர்புடைய புகார்களுக்கு ரயிலில் பாதுகாப்பணியில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களை அழைத்து சரி செய்ய வேண்டும் .
பண்டிகை காலம் என்பதால் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது , இதனால் முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவர்
எனவே தகுந்த முன்னேற்பாடுகளோடு ரயில்வே ஊழியர்களும் , ரயில்வே பாதுகாப்பு படையினரும் பணிகளில் ஈடுபட தெற்கு ரயில்வே வலியுறுத்தல் .
மேலும் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்பது தொடர்பான விதிகள் இருப்பதால் ரயில் நிலையங்கள் கண்காணிப்பை ரயில்வே பாதுகாப்பு படை தீவிரப்படுத்துவது அவசியம் .
தீபாவளி பண்டிகையொட்டி ரயில் நிலைய வளாகங்களில் நுழைவாயில்களில் முறையான சோதனைக்கு பின்னரே பயணிகளை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும் ..
முன்பதிவு செய்த பயணிகள் தவிர்த்து காத்திருப்புப்பட்டியில் இருப்பவர்கள் , இரண்டாம் வகுப்பு டிக்கெட் பெற்றவர்கள் யாரும் முன்பதிவு பெட்டிகளில் ஏறி அமர வேண்டாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு எச்சரிக்கை கொடுத்துள்ளது.