சென்னை; தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், அது தொடர்பாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆம்னி பேருந்துகட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த பயணிகள், புதிய கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் சென்று தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. அதுபோல ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதற்கிடையில், தனியார் பேருந்துகள், தங்களது கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி உள்ளது. இது பயணிகளில் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தபபட்டது.
இதுகுறித்து ஏலபளமான தொடர் புகார்கள் எழுந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், பொதுமக்கள் இது தொடர்பாக புகாரளிக்க 1800 425 5161 என்ற தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டன.
‘இதைத்தொடர்ந்து, போக்குவரத்து துறை ஆணையர் கஜலட்சுமி தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கட்டண விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசின் விதிகளுக்கு உட்பட்டு பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.‘ அத்துடன், விதிகளை மீறி செயல்படும் வாகனங்களை சிறை வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் கட்டண கொள்ளையை குறைப்பதாக உறுதிமொழி அளித்துள்ளனர். அதன்படி, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல சுமார் 5000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், 3000 ரூபாய் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல, சுமார் 4000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது 2600 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் இருந்து கோவை , திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கனவே உயர்த்தி நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள், ஆம்னி பேருந்து டிக்கெட் முன்பதிவுக்கான இணையதளத்தில் குறைக்கப்பட்டுள்ளன.
டிக்கெட் குறைப்பு ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள், இணையதளத்திற்கு சென்று கட்டண குறைவு குறித்து தெரிந்துகொள்ள முடியும்.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன், அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார். கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜேந்திரன் தெரிவித்தார்.