சென்னை; இன்றுமுதல் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில்  மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

அதுபோல சென்னை வானிலை ஆய்வு மையமும்  இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

“தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள கடலோர பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று (14-10-2025) கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அக்டோபர் 18ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும்.

15-10-2025 அன்று  கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தத.

இந்த நிலையில், தூத்துக்குடி முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மழை தீவிரமடையும் நிலையில் மக்கள் குடை மற்றும் ரெயின்கோட்டுகள் எடுத்துச் செல்ல பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.

மழை தொடர்பாக பிரதீப் ஜான், தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று (அக்டோபர் 14) சென்னையில் திடீர், தீவிரமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை (அக்டோபர் 15) முதல் அடுத்த 4 நாட்களுக்கு (அக்டோபர் 15 முதல் 18 வரை) மழைப்பொழிவு மேலும் தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று முதல் திடீர், வேகமான மழை பெய்யத் தொடங்கும். கடல் பகுதியில் இருந்து மேகங்கள் சென்னை நோக்கி நகர்வது ஒரு அழகான காட்சியாக உள்ளது என்றும், இந்த சிறிய மேகக் கூட்டங்களே குறுகிய நேரத்தில் 20 முதல் 30 மி.மீ வரை மழையைப் பொழியக்கூடிய திறன் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள உள் மாவட்டங்கள்:

கடலோரப் பகுதிகள் தவிர, தமிழகத்தின் உள் மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.