சென்னை; தமிழ்நாட்டின் முதல் அறிவு நகரம் திருத்தணி  அருகே  ரூ.89.9 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு டெண்டர்  கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. இது தமிழ்நாட்டில் உயர் கல்விக்கான புதிய அத்தியாயம் என கூறப்படுகிறது.


திருவள்ளூர் அருகே திருத்தணிக்கு அருகில்  அமையவிருக்கும் அறிவு நகரம் (Knowledge City) திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த  அறிவு நகரம் (Knowledge City) திட்டத்திற்கான சாலைகள், வடிகால்கள், நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை அமைப்பதற்காக தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (Sipcot) ரூ.89.9 கோடி மதிப்புள்ள டெண்டரை அறிவித்துள்ளது. இந்த பிரம்மாண்டத் திட்டமானது தமிழ்நாட்டின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலப்பரப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த அறிவு நகரத் திட்டத்தை மாநில அரசு பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (Tidco) 12.65 ஏக்கர் பரப்பளவில் ஒரு ‘அறிவு கோபுரத்தை’ (Knowledge Tower) உருவாக்க ஆலோசனை ஒப்பந்தப்புள்ளிகளை (consultancy bids) கோரியுள்ளது. இந்த கோபுரம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கழகங்களுக்கு ஒரு மையமாகச் செயல்படும். இதுகுறித்த தகவல்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சிப்காட் நிர்வாக இயக்குநர் கே. செந்தில் ராஜ் கூறியதாவது, “இந்த டெண்டர் அறிவிப்பு, திட்டத்தின் ஒரு பகுதியான செங்கத்தக்குளம் பகுதியில் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள் மற்றும் கல்வெட்டுகள் அமைத்தல், நீர் விநியோகம் மற்றும் சுகாதார ஏற்பாடுகளைச் செய்வதற்கானது ஆகும். இந்த டெண்டர் ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 30 ஆகும்”.

இதுதவிர, “பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள் மற்றும் பிற நவீன உள்கட்டமைப்புகளும் திட்டமிடப்பட்டு வருகின்றன. நிறுவனம் இறுதி செய்யப்பட்டவுடன் பணிகள் தொடங்கும். ஏழு முதல் எட்டு மாதங்களுக்குள் இந்த வளர்ச்சியைக் காணலாம்,” என்று இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் டிட்கோ-வின் நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

டிட்கோ இந்தத் திட்டத்திற்கான ஒரு பொது-தனியார் கூட்டாண்மை (Public-Private Partnership – PPP) ஆவணத்தை இறுதி செய்து வருகிறது, மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அறிவு மையத்தின் நோக்கம் குறித்துப் பேசிய சந்தீப் நந்தூரி, “சமீபத்தில் ஜெர்மனியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆ.டபிள்யூ.டி.எச் – ஆச்சென் பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இத்தகைய நிறுவனங்கள் இங்கு வரும்போது, உயர்கல்விக்காக இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது குறையும். அதுவே இந்த அறிவு மையத்தின் நோக்கம்,” என்று விளக்கினார்.

அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு வரவேற்பு இருந்தாலும், திட்டத்தின் அணுகுமுறை குறித்து மாறுபட்ட கருத்துக்களும் உள்ளன. “இந்த யோசனை சிறந்தது, ஆனால் அரசு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, அதிக இந்தியப் பல்கலைக்கழகங்களைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே இங்குள்ள கல்வியின் தரத்தை மேம்படுத்தும்,” என்றார் சந்தீப் நந்தூரி.