சென்னை:  22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான சென்னை ‘ஸ்ரேசன் ஃபார்மா’ மருந்து நிறுவனம் தொடர்பு உடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் சென்னையில் ஸ்ரேசன் ஃபார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்ட நிலையில்,  இன்று அவரது வீடு உள்பட அவரது நிறுவனம் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் அசுத்தமான இருமல் மருந்து காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிரப்பின் பெயர் “கோல்டுரிஃப்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சளி மற்றும் காய்ச்சலுக்கு இந்நிறுவனத்தின் கோல்டு ரிஃப் இருமல் மருத்து கொடுக்கப்பட்ட நிலையில், இந்த மருந்தால்  சிகிச்சை பெற்ற  குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் குடித்த, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தில், நச்சுத் தன்மை ஏற்படுத்தும், ‘டை எத்திலின் கிளைகால்’ என்ற ரசாயனம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.  இந்தச் சம்பவம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த மருந்துக்கு தடை விதிக்க உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக, தமிழ்நாடு மருந்து நிறுவனம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து,  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள  கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.

‘ஸ்ரீசன்’ நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்பது தற்போது அம்பலமாகிஉள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோடம்பாக்கம் நாகார்ஜூனா 2வது தெருவில் உள்ள மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் அபார்ட்மென்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரத்தில் இவர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் முறையாக சோதனை நடத்தாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.

அதேவேளையில், அண்ணா நகரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே, ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, கார்த்திகேயன் வீட்டில் கடந்த ஜூலை 22ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.