சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு  உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த  தொடர்பாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபேற்ற விசாரணை, குறிப்பாக நீதிபதி செந்தில் குமாரின் கேள்விகள் மற்றும் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதையே உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டியது.

இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று 8-வது நாளாக விசாரணை நடைபெற்றது.

மேலும்,   திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து கூடுதலாக ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பளிக்கிறது.