சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடல் பகுதியில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது. இந்த விற்பைனையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், துணிகள் வாங்க கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. , நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் தீபாவளி பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் இன்று காலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதேவேளையில், தங்கத்தின் விரலாறு காணாத விலை உயர்வால் நகைக்கடைகளில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் செல்லாததால், பல கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையில், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளிலும் மக்கள், இப்போதே பட்டாசுகளை வாங்கி வருகின்றனர்.
.இந்த நிலையில், சென்னை மக்களின் வசதிக்காக, சென்னை தீவுத்திடல் பகுதியில் பட்டாசு விற்பனையாளர் சங்கம் சார்பில் 30 கடைகள் போடப்பட்டுள்ளன. இநத் கடைகளை அமைத்து பட்டாசுகளை அடுக்கி வைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், பட்டாசு விற்பனையை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைக்கவுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு உத்தரவின்படி ஆபத்தான பட்டாசுகளை தவிர்த்து பசுமை பட்டாசுகளே விற்பனைக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.