மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும், அது சிங்கந்தர் மலை கிடையாது என உறுதி செய்ததுடன், மலைமீது ஆடு, கோழி பலியிட தடை விதித்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ளது. மேலும், மலையில் மேல் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. இதே போல இந்த மலையின் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா என்ற தர்காவும் உள்ளது.

இந்த தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவின்போது ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி விழா நடைபெற உள்ளதாக தர்கா நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்த நிலையில் இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி பலியிடுவதற்காக ஆடுகளை எடுத்துச்செல்ல ஒரு தரப்பு இஸ்லாமியர்கள் கூட்டமாக மலைமீது ஏற முயன்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மலைமீது செல்ல முயன்ற இஸ்லாமிய அமைப்பினரை காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதற்கிடையில் இஸ்லாமிய எம்.பி. நவாஸ்கனி ஒரு குழுவை அழைத்து மலைமீது சென்று அங்கு பிரியாணி சாப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினர். இதையடுத்து, இந்துக்கள் மலைமீது ஏறவும் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் திமுக அரசும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது.
இது இந்து மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலையை சொந்தம் கொண்டாடி லட்சக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டன. அதன்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் ஆடு கோழிகள் பலியிட தடை விதிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் மற்றும் சமூக அலுவலர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதேபோல சிக்கந்தர் தர்காவிற்கு செல்லும் வழியில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமிய வழக்கப்படி நடைபெறும் வழிபாட்டு உரிமைகளை தடுக்கக்கூடாது, ஆடு கோழிகள் பலியிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகளுடன் எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் மற்றும் சிலர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது தமிழ்நாடு அரசு, உண்மைக்கு புறம்பாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வாதாடியது. இது இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளான நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, ஆடு – கோழி பலியிட தடைவிதித்தும், நீதிபதி நிஷா பானு (முஸ்லிம்) மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
இரண்டு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை வழங்கியதை அடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி ஒருவர் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார் அதன் பேரில் நீதிபதி விஜயகுமார் இந்த வழக்கை விசாரித்து அளித்துள்ளார்.
அவரது தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதித்தும், இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்று அழைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா செல்லும் வழியில் உள்ள நெல்லித்தோப்பில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தலாம் எனவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்..