இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் (NPCI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சேர்ந்து, பயோமெட்ரிக் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் அடிப்படையிலான UPI அங்கீகார முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இது குறித்த அறிவிப்பை நேற்று மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2025ல் NPCI மற்றும் RBI வெளியிட்டது.
இந்த புதிய நடைமுறை மூலம் இனி, முக அங்கீகாரம் அல்லது கைரேகை (Fingerprint) மூலம் UPIல் பணம் செலுத்தலாம். இதனால், பழைய 4 அல்லது 6 இலக்க PIN எண் தேவையில்லை.

இந்த அங்கீகாரம் பயனரின் மொபைலில் உள்ளேயே நடப்பதால் தகவல் வெளியே போகாது என்றும் அதிக பாதுகாப்பு கொண்டது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட மற்றொரு கண்டுபிடிப்பு, அணியக்கூடிய ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கான UPI லைட் அம்சமாகும்.
இது சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகளை முற்றிலும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் கண்ணாடி வழியாக ஒரு குரல் கட்டளையைக் கொடுத்து பணம் செலுத்தலாம்.
இதற்கு கைபேசி, பின் எண் அல்லது தொடுதல் தேவையில்லை என்றும் குரல் மற்றும் QR ஸ்கேன் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பம் அல்லது வணிகம் போன்ற கூட்டு கணக்குகளில், பணம் செலுத்துவதற்கு அனைத்து கையொப்பமிட்டவர்களிடமும் ஒப்புதல் பெற முடியும்.
பயனர்கள் UPI PIN அமைக்க, மீட்டமைக்க, அல்லது ATM-ல் பணம் எடுக்க கூட பயோமெட்ரிக் வழி பயன்படுத்தலாம்.
இந்த புதிய செயல்முறை மூத்த குடிமக்கள், கிராமப்புற மக்கள் மற்றும் PIN நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்படும் பயனர்களுக்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதனால், ஆதார் முக அங்கீகாரம் மூலம், டெபிட் கார்டு இல்லாதவர்களுக்கும் UPI பயன்பாடு எளிதாகும்.
இந்த முயற்சி இந்தியாவின் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் ஒரு புதிய மைல்கல் என்று கூறப்படுகிறது.