சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் அக்டோபர் 9 ஆம் தேதி அவினாசி உயர்மட்ட பாலத்தை திறந்து வைப்பதற்காக கோவை செல்கிறார். இதையடுத்து, அங்கு போக்குவரத்து மாற்றம் குறித்து, காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவையை அடுத்த அவினாசி பகுதியில் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு 17.25 மீட்டர் அகலத்தில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்துக்கு ஜிடி நாயு பாலம் என பெயர் வைக்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த பாலத்தை திறந்து வைப்பதற்காக நாளை மறுதினம் கோவை செல்ல உள்ளார். இதையடுத்து, மேலும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை வரும் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க திமுகவினர் திட்டமிட்டு வருகிறார்கள். இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரஉள்ளதால், ஸ்டாலினின் கோவை வருகை மக்கள் மற்றும் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நீலாம்பூர் வழியாக நகருக்குள் வரும் கனரக வாகனங்கள், பேருந்துகள், நீலாம்பூர் விமான நிலையம் வழியாக சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் ஆம்னி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து நகருக்குள் வருவதற்கு தடை செய்யப்படுகிறது. Advertisement மாறாக நீலாம்பூரிலிருந்து எல் அன்ட் டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம், சுங்கம் வந்து வலது புறம் திரும்பி கே.ஆர். ரோடு, அவினாசி சாலை, அண்ணா சிலை வழியாக காந்திபுரம் வந்தடையலாம். நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வரும் இலரகு வாகனங்கள், தொட்டிபாளையம் பிரிவில் வலது புறம் திரும்பி தொட்டிபாளையம், காளப்பட்டி நால்ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.
காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அவினாசி ரோடு, ஏர்போர்ட் வழியாக நகருக்கு வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், லட்சுமி மில்லில் யூ டர்ன் செய்து புளியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், எல்அன்ட்டி பைபாஸ் வழியாக வெளியே செல்லலாம். அதே போன்று காந்திபுரத்திலிருந்து சத்தி சாலை வழியாக கணபதி, வாட்டர் டேங்க், விளாங்குறிச்சி, காளப்பட்டி நால் ரோடு வழியாக எல்அன்ட்டி பைபாஸ் சென்று அடையலாம். நகருக்குள் இருந்து அவினாசி ரோடு, ஏர்போர்ட் வழியாக செல்லும் இலரகு வாகனங்கள் மற்றும் நகர பேருந்துகள், டைட்டல் பார்க் வரை சென்று யுடர்ன் செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டும்.
விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், காந்தி மாநகர், கொடீசியா வழியாக செல்லும் கனரக வாகனங்கள் கொடீசியா வழியாக செல்வதற்கு தடை செய்யப்படுகிறது. அதற்கு மாறாக காளப்பட்டி நால் ரோடு, தென்னம்பாளையம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தண்ணீர் பந்தலில் இருந்து கொடீசியா வழியாக செல்லும் இலரகு வாகனங்கள் காந்தி மாநகர், பயனீயர் மில் வழியாக அவினாசி ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம், சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் அனைத்தும் குறிச்சி பிரிவில் இடது புறம் திரும்பி போத்தனூர் கடை வீதி, ரயில் கல்யாண மண்டபம், செட்டிபாளையம் ரோடு வழியாக ஈச்சனாரி அடைந்து சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.
பொள்ளாச்சி சாலை வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் கற்பகம் காலேஜ் சந்திப்பிலிருந்து மேம்பாலத்தின் மேல் வராமல் சர்வீஸ் சாலையில் வந்து ஈச்சனாரி கோயில் முன்பு யூ டர்ன் செய்து, செட்டிபாளையம் ரோடு, ரயில் கல்யாண மண்டபம், போத்தனூர், நஞ்சுண்டாபுரம் ரோடு, ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம்.
மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் பிள்ளையார்புரம் செக் போஸ்ட், சுகுனாபுரம் வழியாக கோவைப்புதூர் பிரிவு, குனியமுத்தூர், புட்டு விக்கி வழியாக நகருக்குள் வரலாம்.
மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் மாச்சாம்பாளையம் பிரிவிலிருந்து இடதுபுறம் திரும்பி ஞானபுரம், பாலக்காடு ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் .
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.