சென்னை; தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் சென்னை ஒன் செயலில், சென்னை மாநகர பேருந்துக்கான  மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்ட உள்ளது. இதன்மூலம் மாதாந்திர பயண அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

இந்தியாவிலேயே முதல்முறையாக, அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில்  ‘சென்னை ஒன்’ செயலி உருவாக்கப்பட்ட கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் வகையில் Chennai One மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 22ந்தேதி அன்று  தொடங்கி வைத்தார்.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் உருவாக்கிய சென்னை ஒன் செயலிக்கு,  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பேருந்து, ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுக்காக  காத்திருக்க வேண்டியது இல்லை.

இந்த நிலையில், இந்த செயலி மூலம்,  சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பயணிகளுக்கு வழங்கிவரும் மாதாந்திர பயண அட்டை  பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகளை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்துப் பயணிகளும் பயன்பெறும் வகையில் ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 ஆகிய இரண்டு மாதாந்திர பயண அட்டை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ரூ. 1,000 பயணத் திட்டத்தில் குளிர்சாதனப் பேருந்துகளைத் தவிர, ரூ. 2,000 பயணத் திட்டத்தில் அனைத்துவகை மாநகரப் பேருந்துகளிலும் மாதம் முழுவதும் பயணம் செய்துகொள்ள முடியும். இந்த மாதாந்திர பயண அட்டைகள், சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் உள்ள அலுவலகங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. மாதம்தோறும் நேரில் சென்று பயணிகள் புதுப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில், பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் சென்னை ஒன் செயலி மூலமே மாதாந்திர பயண அட்டையைப் பெறும் வசதியும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.